Thursday, August 14, 2025

கந்தசாமி

நிமிர்ந்த நடை நடந்து
நிற்காமல் உழைத்திடுவான்,
நாமறிந்த செய்திகள் - இவன் 
செவி சென்று வந்தவையே,
கடமையைக் கருத்தாகச் 
செய்திடுவான் - பிணியைக் 
கண் விழித்து விரட்டிடுவான்!


அவதிப் படுவோரின்
ஆபத்பாந்தவன்,
சேகுவாராவின் சகோதரன்,
பெரியாரின் பேரன்,
பகுத்தறிவைப் பேசிவிட்டுப் 
பசப்புகளை உடைத்திடுவான்,
சிகிச்சையென்று வந்துவிட்டால்
சிரத்தையோடு செய்திடுவான்,
சமூக நீதியின் சத்தம் - அவன் 
சபை எங்கும் ஒலித்திருக்கும் - ஆம்
அறுவை சிகிச்சையில் - அவனுக்கு
அனைவரும் சமமே!

அவன் முகம் கண்டவுடன்   
கவலைகள் கலைந்தோடும்,
உறுதியான கை பட்டு - உன் 
உள்ளுறுப்பு உறுதி பெறும்,
ஆரோக்கியம் மட்டுமல்ல
அறமும் பழகிடுவான்,
மருத்துவத்தால் மட்டுமல்ல 
மதியாலும் விதி செய்வான்!

நரிகள் ஆடும் ஆட்டம் - அவன்
நாடியிலே ஒட்டவில்லை,
கோடிட்டு வாழ்பவன்
கோடிகளுக்கு ஆசையில்லை - அவன் 
அன்புக்கு அளவுண்டு - ஆனால்
அக்கறைக்கு அளவே இல்லை,
பிணியோடு வந்தோரின் 
பிறவிதனைப் பேணிக் காக்கப்  
பிறப்பெடுத்து வந்த சாமி,

எங்கள் 
கந்தசாமி!

Monday, July 7, 2025

புத்தன்

அழகிதான் அவள்,
ஆறு வயதிருக்கும்,
அழுக்குச் சட்டை,
ஆறாத நடை,
ஆதரவு யாருமில்லை
ஆற்றுவார் எவருமில்லை - ஆனாலும்
அவள் அழகிதான்,
இடுங்கிய கண்களிலே  
ஈரத்தின் தடயம், 
பரட்டைத் தலையுடன் 
பாலை வயிற்றுடன்,
வெட்ட வெளியினிலே 
வெய்யிலின் வெக்கையிலே - அவள் 
மயக்கத்தின் விளிம்பில்,
மழலையோ 
மயங்கிய நிலையில்,
மகிழ்ச்சியல்ல 
மதிய உணவே இலக்கு,
நாளையல்ல - ரூபாய்
நாற்பதுதான் கணக்கு,
கூட்டத்தி்ல் தொலைந்து,
கூவிக் கூவிக் கரைந்து,
பேரம் கேட்டுப் பயந்து 
பேசிப் பேசிக் கவர்ந்து,
புத்தகம் ஒன்றை விற்றுவிட்டு,  
புள்ளினமாய் ஓடிச்சென்று
புளிச்சோற்றைத் தின்றுவிட்டு 
மீண்டும்
மக்களோடு மறைந்துவிட்ட - அந்த
மழலையின் கதறல்...
என்னைப்  
புத்தனாக்குமா?

Monday, May 5, 2025

இசை

அழவைக்கும் அழகூட்டும்,
உணர்வூட்டும் உயிரூட்டும் 
உச்சி முகர்ந்து 
உறங்க வைக்கும்,
உறங்காமல் 
விழிக்க வைக்கும்,
கலங்கடிக்கும்
கட்டியும் அணைக்கும்,
காலத்தைச் சுருக்கிவிட்டுக் 
கடந்தவற்றை நினைவூட்டும்,
நினைவுகளை நீட்டிவிட்டு
நீண்ட தூரம் கூட வரும்,
சுருக்கமாகச் சுகமளித்து
சுதந்திரத்தின் அடிமையாக்கும்,
மண் வாசனையில் 
மயங்க வைக்கும்,
மதியை மறக்கடிக்கும்,
கள்ளுண்ணாமலே  
போதை தரும்,
கலவியின்றி 
உச்சமும்  தரும்,
காதலையோ கொண்டாடும் - ஆனால்
காற்றின் வழி வந்து 
காலத்திற்கும் கூட வந்து 
உயிரினிலே கலந்தாலும்
புரிவதேயில்லை... 
இசை!

Sunday, May 4, 2025

பிரிவு

விடுமுறையில் 
நீ தாய் வீட்டில்,
விடுதலையில் 
நான் தனிக் கூட்டில்,
சீரில்லா  இத்தனிமை 
சிறப்புதான்  என்றாலும் 
சீமாட்டி நீ இல்லாமல் 
சிகரம் தொட்டு 
என்ன பயன் - என 
தாய் வீடு 
சென்றிருந்த - நீலத்தை
நினைத்து நினைத்து  
நிர்க்கதியாய்  நின்றிருந்த 
நிலவிடமே கேட்டுவிட்டேன் - ஆனால்
தொலை தூரம் - நீ 
சென்றாலும் 
தொலையாத 
உன் நினைவை - என் 
வீடெங்கும் ஒலித்திருக்கும்  
உன்  கொலுசொலி 
சொல்லியது, 
"இந்தத் 
தற்காலிகப் 
பிரிவு கூட - ஒரு
தரமான 
காதல் தான்!
"

Wednesday, April 30, 2025

நேர்மை

ரயிலுக்குச்  
சீட்டு எடுத்துவிட்டு,
ரசீதையும் வாங்கிவிட்டு, 
மீதச் சில்லறையை 
எண்ணிவிட்டு, 
மிக அதிகம் 
இருப்பதை - ஒருவன் 
அரசிடமே 
திருப்பிக் கொடுத்தால், 
அங்கே தான் 
அருகில்  
எங்கோ இருக்கிறான் 
என் அப்பன் 
குமரேசன்!

Tuesday, March 4, 2025

கூடல்


அதன் பின் 
யோசித்தேன்,
நீ இல்லையெனில் 
என்னாவேன் என்றெண்ணி - என்
உக்கிரத்தை உதறிவிட்டு 
உன்னிடமே ஓடி வந்தேன் - உன்
மனதளவில் எனை 
மன்னிக்கும் முன் 
கொஞ்சம் கட்டிக்கொள்,
நீ மன்னிப்பது - என் 
மனதுக்குக் கேட்க 
வேண்டுமல்லவா - இப்போதைக்கு
முத்தமெல்லாம்  வேண்டாம்,
இறுகக் கட்டிக்கொள் போதும்,
கொஞ்சம் மூச்சுத் திணறும்
விலகி விடாதே - பிடியை 
விட்டு விடாதே,
முடிந்தால் 
இன்னும் இறுக்கிக் கட்டு - உன் 
அன்பின் அரவணைப்பில்  - என் 
ஆணவங்கள் அழியட்டும்,
விலா எலும்புடன் சேர்ந்து
என் வினையெல்லாம் 
நொறுங்கட்டும் !

Tuesday, January 21, 2025

நிலவு

குளிராய் இதமாய் 
முழுதாய் முடிவாய்
பிறையாய் பிழையாய்  
மஞ்சளாய் சிவப்பாய் 
மதியாய் யுவதியாய்
மழலைக்குக் கதையாய்
மந்திர ஒளியாய் 
காதலின் துணையாய்
கதிரவனின் நட்பாய்
இரவின் கொடையாய்
இருளின் விளக்காய்
ஒளிந்தும் மறைந்தும்
வளர்ந்தும் தேய்ந்தும்,
பாசாங்காய்.. 

நிலவு!