Friday, May 31, 2019

அதிசயம்

வெண்மையதன் ஆதிக்கத்தால்
மறு நிறங்கள் மறந்தேனோ?
நிறங்களதை மறந்துவிட்டுப்
பார்வைதனை இழந்தேனோ?

பார்வைதனை இழந்ததனால்
காதலென்று உணர்ந்தேனோ?
காதலினால் ஆனதனால்
வியப்பினிலே விழித்தேனோ?

வியப்பினிலே விழித்ததனால்
கண்கொள்ளாமல் கண்டேனோ?
கொள்ளாமல் கண்டபின்பு
மெய்யதனை மறந்தேனோ?

மெய்யதனை மறந்ததனால்
இதயம் மட்டும் கொண்டேனோ?
ஓரிதயம் மட்டும் கொண்டுத்
திக்கின்றித் திரிந்தேனோ?

திக்கின்றித் திரிந்ததனால்
பளிங்குகளைத் தொட்டேனோ?
பளிங்கதனைத் தொட்டவுடன்
உறைந்துடைந்து போனேனோ?

உறைந்துடைந்து போனதனால்
காதல் ஆழம் உணர்ந்தேனோ?
ஆழத்தை உணர்ந்துவிட்டு
யமுனையிலே மாய்வேனோ?

யமுனையினிலே மாய்ந்ததினால்
விண்ணுலகம் செல்வேனோ?
விண்ணுலகம் சென்றவுடன்
ஷாஜகானைக் காண்பேனோ?

ஷாஜகானைக் கண்டதனால்
மறு பிறவி எடுப்பேனோ?
மறுபிறவி எடுத்தவுடன் - என்
காதலியைக் காண்பேனோ?

காதலியைக் கண்டதனால்
காதலித்துத் திளைப்பேனோ?
ஷாஜகான் போல் காதலித்து
வரலாற்றில் நிலைப்பேனோ?

வரலாற்றில் நிலைத்தனால்
சுவர்க்கத்தை அடைவேனோ?
சுவர்க்கத்தைத்  தவிர்த்துவிட்டுத்
தாஜ்மகாலில் நிலைப்பேனோ?

அற்பச் சுவர்க்கத்தைத்
தவிர்த்துவிட்டு - அழகுத்
தாஜ்மகாலில் நிலைப்பேனோ!

Friday, May 3, 2019

கறிவேப்பிலைக்காரி

சிறுவயது முதலே
அவளை அறிவேன்,
அனுபவத்தைத் தலையிலும்
அகவையை உருவிலும்
கொண்டிருப்பாள்,
ரவிக்கை அணிவதில்லை
வெண்ணிறச் சீலை மட்டுமே,
பக்கத்து வீட்டுக்காரி!

என்னுடைய வரவறிந்தால்
உச்சி வெயிலானாலும்,
பாதங்கள் பொசுங்கினாலும்,
நடுங்கிய நடையதுவும்
தடம் தப்பிப் போனாலும்,
ஓடோடி வந்திடுவாள்!

அவளின் முகம் பார்த்தவுடன்
கவலைகள் கலைந்தோடும்,
நடுங்குமவள் கை தொட்டு
எண்ணங்கள் உறுதி பெரும்,
தூயவளின் ஆசீர்வாதம்
தீய வினைகள் தீர்த்துவிடும்,
பசிநேரம் வந்துவிட்டால்
அவள் குழைத்து வடித்தச்
சோற்றுப் பருக்கைப்
பாசத்தால் பருத்திருக்கும் - இதோ
நானாகிய நாத்திகனும்
அவளாகிய நாராயணனும்
சந்தித்த தருணம்!

வியாழன் தோறும்
புளியம்பட்டிச் சந்தை - அவள்
கறிவேப்பிலையை நுகர்ந்திடவே
கால்கடுக்கக் காத்திருக்கும்.
அன்றவள்
"கறிவேப்பிலை வாங்கலியோ?"
என்றவள் கூவுவதை
ஊரில் கேட்காத ஆளில்லை,
இன்றவள்
கறிவேப்பிலைத் தேகம்
கதறுவதை - அவள்
சிறுநீர் கூடக் கேட்பதில்லை!

நன்செய் நிலமில்லை
தண்டட்டித் தோடில்லை,
ஒற்றைச் சேலையும்
ஒழுகும் வீடும்
ஒண்டிக் குடித்தனமும்தான் - ஆனாலும்
அவளைப்போல் மகிழ்ந்திருந்தவள்
ஊரிலுமில்லை, பாரிலுமில்லை!

காமாலை முற்றி வந்த
மூன்று  வருடக்
குழந்தை என்னை
ஆடு தொடாச் செடியரைத்து
ஆபத்தின்றிக் காத்தாயே,
உன்னுயிர் இன்றுத் தவிக்கையிலேக்
கடவுளாகத் துடிக்கின்றேன்,
அவ்வாறொன்று இல்லையென - சத்தியம்
சம்மட்டியில் அடிக்கிறதே!

ஈயெறும்பு அண்டாமல்
ஈனப்பிறவி ஆகாமல்
இன்றுவரை எனைக்காக்கும் - என்
அப்பத்தா அமத்தா மட்டுமல்ல,
கருவாக எனைத்தாங்கிக்
கலியுகத்தில் சேர்த்திட்ட
என் அன்னை மட்டுமல்ல,
மருத்துவர்கள் கைவிட்டும்
மூலிகைகள் கண்டெடுத்து
என்னுயிரைக் காத்திட்டப்
பாங்கிழவி...
நீயும் என் தாயே!

குறிப்பு: என்னுயிர்க் காத்திட்டப் பக்கத்து வீட்டுப் பாட்டி இன்று மரணப்படுக்கையில்.