Tuesday, November 28, 2017

குருதிப்புனல்

நிலையான ஓர் ஓடை - அதில்
நகர்கின்ற சில பாறை,
நின்றுவிட்ட உன் பயணம்  -அதில்
பின்னோடும் பல மரங்கள்,
பூப்போன்றக் குளிர்த் தூறல் - அதை
யாசிக்கும் இரு கரங்கள்,
நின்றாடும் உன் மனது
நகர்ந்தோடும் உன் வயது,
அத்துனையும் களித்துவிட்டு
உன்னுடல் நீ தழுவுகையில்
துளையிட்டு அடைந்திருப்பேன்
குருதியெனும் என்னிலக்கு!

புழுவென்பார் பூச்சியென்பார்
தத்தித்தாவும் விலங்கென்பார்
சிறுபாம்பு தானென்பார்
அட்டையென்பார் சாரையென்பார்
பயந்திடுவார் அலறிடுவார்
இழிச்சொல்லில் இகழ்ந்திடுவார்
பழித்திட்டே மிதித்திடுவார்
எச்செயலவர் புரிந்தாலும்,
என்னிலக்கு அவர் குருதி!

கலையாக அவனொருவன்
கருநிறமாய் இன்னொருவன்
மாநிறத்தில் மற்றொன்று
குட்டையொன்று நெட்டையொன்று
பருத்துவிட்டு இளைத்ததொன்று
எவ்வுரு நீ கொண்டாலும்
புறத்தழகு புரிவதில்லை
உன்னுடலில் ஆடியோடும்
செங்குருதி என்னிலக்கு!

சாதி மத பேதமில்லை
சாமி சாத்தான் கண்டதில்லை,
பணமதிப்பில் அறிவில்லை
பகட்டதனில் களிப்பில்லை,
வழக்கென்று வந்துவிட்டால்
சாட்சிக்கு எனை அழையும்,
உண்மைதனை உரைத்திட்டு
உன் வாழ்வைக் காத்திடுவேன்,
தானமிட்டுப் பிழைத்துப்போ
என்னிலக்கு ஒன்றேதான்
உன் குருதி உன் குருதி!

மூக்குப்பொடிப் பூசியெனை
முடக்கிவிட நினைத்துவிட்டு
முன்னேறும் மூடர்களே,
மூக்குப்பொடி மூலதனம்
மூநிமிட வரலாறு,
கலவியெனும் போதைக்கே
துணையெனக்குத் தேவையில்லை
அர்த்தனாரி நானென்ற
மர்மத்தை அறிவாயா?
உன் நாற்றம் நானறிவேன்
உன் வெப்பம் நானுணர்வேன்
எம்முனைப்பு நீ முனைந்தாலும்
அடைந்திடுவேன் அடைந்திடுவேன்
திரிந்தோடும் உன் குருதி!

உன் பாசம் உன் கருணை
உன்னிறக்கம் உன் பரிவு
எனக்கந்தத் தேடலில்லை,
உயிரொன்று போகிறதா
தவறாமல் எனையழையும்
மார் பிளந்து பக்தி கொள்ள - என்
மெய்யறுத்துக் குருதி கொள்வாய்,
மரணமதை மறுத்ததில்லை
மறுபிறவி நானெடுத்து
இருமடங்காய் அடைந்திடுவேன்
உடலோடும் உன் குருதி!

ஐந்திலொரு பூதத்தைக்
குளிரீரம் தோற்கடிக்க,
நெளிந்தோடும் ஒரு பூதம்
பாறைகளைத் தேய்த்திருக்க,
மஞ்சள் நிற பூதமதன்
அடையாளம் தொலைத்திருக்க,
இதிலுன்னைத் தொலைத்துவிட்டு - என்
வருகை நீ மறந்திருக்க,
ஓடி அலுத்தவுன் குருதி
ஒரு நாழி ஓய்ந்திருக்கப்
படர்ந்திருப்பேனுன் சருமத்தில்
தொட்டுத்தடவி நீக்கிவிடு - இல்லை
மூச்சிரைத்து மூர்ச்சையிடு,
இரக்கமின்றிக் கிரகிப்பேன்
சுவை மிகுந்தவுன் குருதி!

என்னினமாயிரம் நசுக்கிவிடு,
சேகரித்தக் குருதியினைப்
புத்துயிரில் புகுத்திவிடு,
மதங்களெல்லாம் மறைந்தோடும்
பலச் சாதி ஒன்றாகும்,
ஒன்றென்பது எண்ணாகும்
அவ்வெண்ணே நனவாகும்
அந்நனவே நன்றாகும்.
உம்மென்றால் இது நடத்து
இல்லையெனில் எழுந்தோடு,
உன் ஆறறிவீனப் பிழைப்பிற்கு
என் ஓரறிவு பொறுப்பல்ல,
எம்முடிவை நீ கொண்டாலும்
நோவாமல் உறிஞ்சிடுவேன்
தெவிட்டாதவுன் குருதி!

குறிப்பு: வால்பாறைப் பயணத்தின் ஓங்கிய நினைவுகளில் அட்டைகளுக்கு ஒரு அகலா இடமுண்டு.  காட்டினுள்ளே காலாற நடந்த போது, நான் செவி மடுத்த அவ்வட்டைகளின் பேச்சு.