Thursday, July 13, 2017

துருவங்கள் இரண்டு

தகிக்கும் வெப்பம்
பொசுக்கும் முன்னே 
கழிவதனைக் கழித்துப் பருகி 
கறை படிந்த கை தாவி
அரிதாரம் மிகப்பூசி - என் 
அடையாளம் தொலைத்துவிட்டு
அழுத்தம் மிக நெறுக்கியதில்
இவ்வுலகு வந்தடைந்த 
தரித்திரத்தின் மறுவுருவம் நான்!

புவித்தாயின் மடி தவழ்ந்து
உழைப்பாளர் கை வருடி
களிமண்ணில் நீர் பருகி 
வர்ணங்கள் பல குழைத்து - அழுத்தம் 
     கொடுத்தப் படிப்பினையில்
தனியடையாளம் தோளேற்றி 
இவ்வாழ்வின் அர்த்தம் பெற
சூளுரையிட்டோடி வந்த
நூல் கூட்டச் சதுரம் நான்!

சிறிதாக நானிருக்க 
ஜடமென நினைத்தென்னை
நெறிமுறைகள் பல தவறி 
அவனழுக்கு எனக்களித்தும்
என்னழகு அவனெடுத்தும்
துச்சமென எனையெரியும்  
மாந்தரிடம் சிக்குண்டேன்!

  கசங்காமல் கலங்காமல்
  சுயமின்றி இருப்புக்கொள்ள 
அமையவில்லை நம் பிறப்பு,
    சிறிதாக நானிருந்தும்
பெரிதான செயலாற்ற
எனக்கென ஓரிடமளித்த
மாணிக்க மாந்தருக்கு
பணி செய்யவே இப்பிறவி!

என்னெச்சில் நான் தொடவே
இருமுறை தான் யோசிப்பேன்
இவனெச்சில் எனைத் தொடவே
அனுமதிதான் கேட்டானோ?

அனுமதிகள் கேட்பதில்லை
உன்னிடத்தில் அவனுரிமை
அவனுரிமை தவிர்த்துவிட்டால்
உன் பிறப்பு வெறும் பிறப்பே!

என் பிறப்பு பஞ்சாகும்
என்நிறமோ பால் வெண்மை
நாளமொற்றி நாற்றமிட்டு
என்நிறத்தை மாற்றி விட்டான்!

என் பிறப்பும் பஞ்சேதான்
என் குணமும் அந்நிறமே
என் வாழ்வும் அவ்வாறே,
கசக்கியெனை இழித்தாலும்
என் மதிப்பு நன்மதிப்பே!

எனைக்கொண்டு குரலோடுக்கிக் 
குற்றங்கள் புரிந்துவிட்டு
பணி செல்லும் இக்கயவர் 
துணையாகச் சென்றாலும் 
முற்களையே முத்தமிடும் 
இழி பிறப்பு என் பிறப்பே!

நம்மருமை விளங்காமல்
புலம்பலிடும் சிறு துணியே,
உன் செவிப்பறையில் 
    ஒலிக்கின்றேன் - சிரமேற்றுக் 
    கேளாயோ!

ஈருடலும் ஓருயிராய்
நிலை மறந்து காதலுரும்
மனமதனில் நின்றிடுவேன்
தூது தாங்கிச் சென்றிடுவேன்!

உலகத்தின் அதிசயமாய்
உயர்ந்திருக்கும் ஒரு நினைவு 
காதலுக்கு சின்னமது
என் பிறப்பும் அதற்கிணையே!

உடலெங்கும் சுற்றிடுவேன், 
உப்புதனைச் சுவைத்திடுவேன்,
அழுத்தங்கள் அதிகரித்தும் 
அழுகைகள் துடைத்திடுவேன்!

என் சொந்தம் நலம் காக்க
முறைப்பாயாய் விரிந்திடுவேன்,
அவனுதடு தினம் துடைத்து 
என் ருசிகள் கூட்டிடுவேன்!

எச்சிலென்று வெறுத்ததில்லை
அவன் வாயொழுகும் நீரதனை 
விட்டுவிட்டு ஓடினாலும்
எனையிழுத்துத்  துடைத்திடுவேன்!

மாசொன்று சேராமல் 
நுரையீரல் காத்திடுவேன்,
மயிரோடு ஒரு நாற்றாய் - அவன் 
சிரத்தினிலே நிலைத்திடுவேன்!

குருதிப்புனல் ஓடுகையில்
அணைக் கட்டித் தடுத்திடுவேன்,
எய்தவனின் குருதி காண
கவணாக மாறிடுவேன்!

  சளியென்ற சலிப்பில்லை 
நம்பினோரை  விட்டதில்லை
தட்டாமல் செய்வதினால்
என்னுதவி பேருதவி!

என் கடமை முடிந்திருந்தால் 
நீருடனே கலந்திடுவேன்,
நன்னீரில் கழுவி கழுவி
பாவங்கள் துடைத்திடுவேன்!

ஒரு சிறப்பா சிறப்புகளா
முடியாது நின்றுரைக்க
கூட்டியுரைக்க நேரமின்றி
இத்தோடு  நிறுத்துகிறேன்!

எவ்வுரை நீ உரைத்தாலும்
அத்தனையும் பரப்புரையே,
மானிடராய்ப் பிறந்த பின்பும்
மலமள்ளும் மாந்தர் போல்
அழுக்கள்ளும் நம் பிறப்பு
நன்பிறப்பென நினைத்தாயோ?

நினைத்து நினைத்து அல்லலுறும்
ஆறறிவா என்னறிவு?
அழகென்றும் அழுக்கென்றும்
புலம்புவதே உன் பிழைப்பு!

வியர்வையின் எல்லை தாண்டிவிடு
உணர்வாய் எது அழுக்கென்று,
நீ படிதாண்டா பத்தினிதான் - ஆதலால் 
உன்னவனிடம் காதல் கொள், 
பின் எச்சிலும் புனிதமே 
வியர்வையும் அமிர்தமே 
அழுக்கென்று எதுவுமில்லை - இன்றைய 
    அழகெல்லாம் 
வெறும் அழுக்கே!

விழுந்தாலும் நாம் விதையே
அழிந்தாலும் நாம் உரமே,
மறு பிறவி நாமெடுத்து
காய் பழமாய் காய்ப்போமோ
மழை கொடுத்து மகிழ்வோமோ!

நம் பெருமை நானுணர்ந்தேன்
உணராமல் நீ போயின் 
வழக்கு வைக்க நேரமில்லை - அவன்  
    நெஞ்சுக்கூடு உறுமியது   
இருமலொன்று வருகிறது,
அவசரமாய் அழைப்பெனக்கு
என்னுரையை முடிக்கின்றேன்
அதிவிரைவாய்க்  கிளம்புகிறேன்!

குறிப்பு: என் நண்பன் ஆணைக்கிணங்கி என்னால் இயன்ற கைக்குட்டைக் கவிதை. தன் பிறப்பு மற்றும் வாழ்வு பற்றி முரண்பட்ட இரு கைக்குட்டைகள் உரையாடுவது போல ஒரு கற்பனை.