Monday, September 22, 2025

முத்தம்

என்னை மறக்கிறேன்,
எளிதாய்ப் பறக்கிறேன்,
ஏழுலகம் சென்றுவிட்டு 
எள்ளி நகைக்கிறேன்,
தத்தித் தடுமாறித் 
தகுதி இழக்கிறேன்,
தயங்கித் தயங்கித் 
தயக்கம் தொலைக்கிறேன்,
தவறிச் செய்துவிட்டத் 
தவறை மறைக்கிறேன், 
இனிப்பைப் பருகிவிட்டு
இறப்பைத் தவிர்க்கிறேன்,
இன்னும் கொஞ்சம் - எனக் 
கெஞ்சிக் கேட்கிறேன்,
வசமாய்க் கவ்விக்கொண்டே 
வாழத் துடிக்கிறேன் - அவள்
மூச்சை இழுத்துக்கொண்டு 
மூர்ச்சையாகிறேன்,
மூடாத அதரங்களில்
முடிவைத் தேடுகிறேன்,
களவாட வந்துவிட்டு 
கலந்து துடிக்கிறேன்,
காலத்தின் விளையாட்டை  
கடித்துக் களிக்கிறேன்,
காதல் தலைக்கேறி 
காமம் தரிக்கிறேன் - பின்
கரணம் அடிக்கிறேன்,
மென்மையின் மயக்கத்தில்
மதியைத் தொலைக்கிறேன் - அவள்
நாவே பனியென்று  
நம்பித் தொலைக்கிறேன் - குளிரை 
உறிஞ்சிக்கொண்டு 
உச்சம் அடைகிறேன்,
உச்சங்கள் சென்றுவிட்டு  
உணர்வை இழக்கிறேன்,
சொர்க்கம் இதுதானென்று 
சொக்கிப் போகிறேன்,
போதி மரத்தடி நின்று
போதாதென்கிறேன்,
முடிவுரை வேண்டாமென்று 
முகவரியைத் தொலைக்கிறேன்,
கொண்டவள் கொடுக்கிறாள்
கொத்திக் கொள்கிறேன்,  
இப்படியே விட்டுவிடுங்கள் - எனை
இப்படியே விட்டுவிடுங்கள்
அவள்
இதழ்களைச் சுவைத்துக்கொண்டே
இச்சென்மம் கடக்கிறேன்!

No comments: