Tuesday, November 28, 2017

குருதிப்புனல்

நிலையான ஓர் ஓடை - அதில்
நகர்கின்ற சில பாறை,
நின்றுவிட்ட உன் பயணம்  -அதில்
பின்னோடும் பல மரங்கள்,
பூப்போன்றக் குளிர்த் தூறல் - அதை
யாசிக்கும் இரு கரங்கள்,
நின்றாடும் உன் மனது
நகர்ந்தோடும் உன் வயது,
அத்துனையும் களித்துவிட்டு
உன்னுடல் நீ தழுவுகையில்
துளையிட்டு அடைந்திருப்பேன்
குருதியெனும் என்னிலக்கு!

புழுவென்பார் பூச்சியென்பார்
தத்தித்தாவும் விலங்கென்பார்
சிறுபாம்பு தானென்பார்
அட்டையென்பார் சாரையென்பார்
பயந்திடுவார் அலறிடுவார்
இழிச்சொல்லில் இகழ்ந்திடுவார்
பழித்திட்டே மிதித்திடுவார்
எச்செயலவர் புரிந்தாலும்,
என்னிலக்கு அவர் குருதி!

கலையாக அவனொருவன்
கருநிறமாய் இன்னொருவன்
மாநிறத்தில் மற்றொன்று
குட்டையொன்று நெட்டையொன்று
பருத்துவிட்டு இளைத்ததொன்று
எவ்வுரு நீ கொண்டாலும்
புறத்தழகு புரிவதில்லை
உன்னுடலில் ஆடியோடும்
செங்குருதி என்னிலக்கு!

சாதி மத பேதமில்லை
சாமி சாத்தான் கண்டதில்லை,
பணமதிப்பில் அறிவில்லை
பகட்டதனில் களிப்பில்லை,
வழக்கென்று வந்துவிட்டால்
சாட்சிக்கு எனை அழையும்,
உண்மைதனை உரைத்திட்டு
உன் வாழ்வைக் காத்திடுவேன்,
தானமிட்டுப் பிழைத்துப்போ
என்னிலக்கு ஒன்றேதான்
உன் குருதி உன் குருதி!

மூக்குப்பொடிப் பூசியெனை
முடக்கிவிட நினைத்துவிட்டு
முன்னேறும் மூடர்களே,
மூக்குப்பொடி மூலதனம்
மூநிமிட வரலாறு,
கலவியெனும் போதைக்கே
துணையெனக்குத் தேவையில்லை
அர்த்தனாரி நானென்ற
மர்மத்தை அறிவாயா?
உன் நாற்றம் நானறிவேன்
உன் வெப்பம் நானுணர்வேன்
எம்முனைப்பு நீ முனைந்தாலும்
அடைந்திடுவேன் அடைந்திடுவேன்
திரிந்தோடும் உன் குருதி!

உன் பாசம் உன் கருணை
உன்னிறக்கம் உன் பரிவு
எனக்கந்தத் தேடலில்லை,
உயிரொன்று போகிறதா
தவறாமல் எனையழையும்
மார் பிளந்து பக்தி கொள்ள - என்
மெய்யறுத்துக் குருதி கொள்வாய்,
மரணமதை மறுத்ததில்லை
மறுபிறவி நானெடுத்து
இருமடங்காய் அடைந்திடுவேன்
உடலோடும் உன் குருதி!

ஐந்திலொரு பூதத்தைக்
குளிரீரம் தோற்கடிக்க,
நெளிந்தோடும் ஒரு பூதம்
பாறைகளைத் தேய்த்திருக்க,
மஞ்சள் நிற பூதமதன்
அடையாளம் தொலைத்திருக்க,
இதிலுன்னைத் தொலைத்துவிட்டு - என்
வருகை நீ மறந்திருக்க,
ஓடி அலுத்தவுன் குருதி
ஒரு நாழி ஓய்ந்திருக்கப்
படர்ந்திருப்பேனுன் சருமத்தில்
தொட்டுத்தடவி நீக்கிவிடு - இல்லை
மூச்சிரைத்து மூர்ச்சையிடு,
இரக்கமின்றிக் கிரகிப்பேன்
சுவை மிகுந்தவுன் குருதி!

என்னினமாயிரம் நசுக்கிவிடு,
சேகரித்தக் குருதியினைப்
புத்துயிரில் புகுத்திவிடு,
மதங்களெல்லாம் மறைந்தோடும்
பலச் சாதி ஒன்றாகும்,
ஒன்றென்பது எண்ணாகும்
அவ்வெண்ணே நனவாகும்
அந்நனவே நன்றாகும்.
உம்மென்றால் இது நடத்து
இல்லையெனில் எழுந்தோடு,
உன் ஆறறிவீனப் பிழைப்பிற்கு
என் ஓரறிவு பொறுப்பல்ல,
எம்முடிவை நீ கொண்டாலும்
நோவாமல் உறிஞ்சிடுவேன்
தெவிட்டாதவுன் குருதி!

குறிப்பு: வால்பாறைப் பயணத்தின் ஓங்கிய நினைவுகளில் அட்டைகளுக்கு ஒரு அகலா இடமுண்டு.  காட்டினுள்ளே காலாற நடந்த போது, நான் செவி மடுத்த அவ்வட்டைகளின் பேச்சு.

Thursday, July 13, 2017

துருவங்கள் இரண்டு

தகிக்கும் வெப்பம்
பொசுக்கும் முன்னே 
கழிவதனைக் கழித்துப் பருகி 
கறை படிந்த கை தாவி
அரிதாரம் மிகப்பூசி - என் 
அடையாளம் தொலைத்துவிட்டு
அழுத்தம் மிக நெறுக்கியதில்
இவ்வுலகு வந்தடைந்த 
தரித்திரத்தின் மறுவுருவம் நான்!

புவித்தாயின் மடி தவழ்ந்து
உழைப்பாளர் கை வருடி
களிமண்ணில் நீர் பருகி 
வர்ணங்கள் பல குழைத்து - அழுத்தம் 
     கொடுத்தப் படிப்பினையில்
தனியடையாளம் தோளேற்றி 
இவ்வாழ்வின் அர்த்தம் பெற
சூளுரையிட்டோடி வந்த
நூல் கூட்டச் சதுரம் நான்!

சிறிதாக நானிருக்க 
ஜடமென நினைத்தென்னை
நெறிமுறைகள் பல தவறி 
அவனழுக்கு எனக்களித்தும்
என்னழகு அவனெடுத்தும்
துச்சமென எனையெரியும்  
மாந்தரிடம் சிக்குண்டேன்!

  கசங்காமல் கலங்காமல்
  சுயமின்றி இருப்புக்கொள்ள 
அமையவில்லை நம் பிறப்பு,
    சிறிதாக நானிருந்தும்
பெரிதான செயலாற்ற
எனக்கென ஓரிடமளித்த
மாணிக்க மாந்தருக்கு
பணி செய்யவே இப்பிறவி!

என்னெச்சில் நான் தொடவே
இருமுறை தான் யோசிப்பேன்
இவனெச்சில் எனைத் தொடவே
அனுமதிதான் கேட்டானோ?

அனுமதிகள் கேட்பதில்லை
உன்னிடத்தில் அவனுரிமை
அவனுரிமை தவிர்த்துவிட்டால்
உன் பிறப்பு வெறும் பிறப்பே!

என் பிறப்பு பஞ்சாகும்
என்நிறமோ பால் வெண்மை
நாளமொற்றி நாற்றமிட்டு
என்நிறத்தை மாற்றி விட்டான்!

என் பிறப்பும் பஞ்சேதான்
என் குணமும் அந்நிறமே
என் வாழ்வும் அவ்வாறே,
கசக்கியெனை இழித்தாலும்
என் மதிப்பு நன்மதிப்பே!

எனைக்கொண்டு குரலோடுக்கிக் 
குற்றங்கள் புரிந்துவிட்டு
பணி செல்லும் இக்கயவர் 
துணையாகச் சென்றாலும் 
முற்களையே முத்தமிடும் 
இழி பிறப்பு என் பிறப்பே!

நம்மருமை விளங்காமல்
புலம்பலிடும் சிறு துணியே,
உன் செவிப்பறையில் 
    ஒலிக்கின்றேன் - சிரமேற்றுக் 
    கேளாயோ!

ஈருடலும் ஓருயிராய்
நிலை மறந்து காதலுரும்
மனமதனில் நின்றிடுவேன்
தூது தாங்கிச் சென்றிடுவேன்!

உலகத்தின் அதிசயமாய்
உயர்ந்திருக்கும் ஒரு நினைவு 
காதலுக்கு சின்னமது
என் பிறப்பும் அதற்கிணையே!

உடலெங்கும் சுற்றிடுவேன், 
உப்புதனைச் சுவைத்திடுவேன்,
அழுத்தங்கள் அதிகரித்தும் 
அழுகைகள் துடைத்திடுவேன்!

என் சொந்தம் நலம் காக்க
முறைப்பாயாய் விரிந்திடுவேன்,
அவனுதடு தினம் துடைத்து 
என் ருசிகள் கூட்டிடுவேன்!

எச்சிலென்று வெறுத்ததில்லை
அவன் வாயொழுகும் நீரதனை 
விட்டுவிட்டு ஓடினாலும்
எனையிழுத்துத்  துடைத்திடுவேன்!

மாசொன்று சேராமல் 
நுரையீரல் காத்திடுவேன்,
மயிரோடு ஒரு நாற்றாய் - அவன் 
சிரத்தினிலே நிலைத்திடுவேன்!

குருதிப்புனல் ஓடுகையில்
அணைக் கட்டித் தடுத்திடுவேன்,
எய்தவனின் குருதி காண
கவணாக மாறிடுவேன்!

  சளியென்ற சலிப்பில்லை 
நம்பினோரை  விட்டதில்லை
தட்டாமல் செய்வதினால்
என்னுதவி பேருதவி!

என் கடமை முடிந்திருந்தால் 
நீருடனே கலந்திடுவேன்,
நன்னீரில் கழுவி கழுவி
பாவங்கள் துடைத்திடுவேன்!

ஒரு சிறப்பா சிறப்புகளா
முடியாது நின்றுரைக்க
கூட்டியுரைக்க நேரமின்றி
இத்தோடு  நிறுத்துகிறேன்!

எவ்வுரை நீ உரைத்தாலும்
அத்தனையும் பரப்புரையே,
மானிடராய்ப் பிறந்த பின்பும்
மலமள்ளும் மாந்தர் போல்
அழுக்கள்ளும் நம் பிறப்பு
நன்பிறப்பென நினைத்தாயோ?

நினைத்து நினைத்து அல்லலுறும்
ஆறறிவா என்னறிவு?
அழகென்றும் அழுக்கென்றும்
புலம்புவதே உன் பிழைப்பு!

வியர்வையின் எல்லை தாண்டிவிடு
உணர்வாய் எது அழுக்கென்று,
நீ படிதாண்டா பத்தினிதான் - ஆதலால் 
உன்னவனிடம் காதல் கொள், 
பின் எச்சிலும் புனிதமே 
வியர்வையும் அமிர்தமே 
அழுக்கென்று எதுவுமில்லை - இன்றைய 
    அழகெல்லாம் 
வெறும் அழுக்கே!

விழுந்தாலும் நாம் விதையே
அழிந்தாலும் நாம் உரமே,
மறு பிறவி நாமெடுத்து
காய் பழமாய் காய்ப்போமோ
மழை கொடுத்து மகிழ்வோமோ!

நம் பெருமை நானுணர்ந்தேன்
உணராமல் நீ போயின் 
வழக்கு வைக்க நேரமில்லை - அவன்  
    நெஞ்சுக்கூடு உறுமியது   
இருமலொன்று வருகிறது,
அவசரமாய் அழைப்பெனக்கு
என்னுரையை முடிக்கின்றேன்
அதிவிரைவாய்க்  கிளம்புகிறேன்!

குறிப்பு: என் நண்பன் ஆணைக்கிணங்கி என்னால் இயன்ற கைக்குட்டைக் கவிதை. தன் பிறப்பு மற்றும் வாழ்வு பற்றி முரண்பட்ட இரு கைக்குட்டைகள் உரையாடுவது போல ஒரு கற்பனை.

Sunday, May 21, 2017

மூணாறு

சித்திரை வெயிலின்
கடுஞ்சினம் அஞ்சி - குளிரும் இரவும்
பயந்தலறிய இருளில் - கதிரவனை மாய்க்கக்
கிழக்கைத் துரத்தினோம்!

ஒளியின் ஒற்றர்களிடம்
சமரிட்டுக் களைத்து - வேழமுகன்
பிளிறலில் நிலை
மறந்து எழுந்தோம் - பின்னவன்
ஆசியுடன் ஆண்டை  நாட்டு
எல்லை நுழைந்தோம்!

கள்வெறி கொள்ளத்
தேரோட்டி அலைந்தோம் - கொண்டபின்
இயற்கையை
உறவுக்கு அழைத்தோம்!

இலக்கம் பாராமல்
லக்கத்தில் திளைத்தோம் - மலை
முகட்டில் மீனென
நீந்திக் குளித்தோம்!

இயற்கையோடு  உறவாட
போதை அணிந்தோம் -  போதை
நிலைத்தாட
போதனை களைந்தோம்!

விரிந்தாடும் நீருடன்
காதல் கொண்டோம் -
 விழுந்தோடும்
அருவியின் தனிமை
சேமித்த நிழல்
தவிர்த்தோம் - அவ்வெற்றியை
கொண்டாட மலையேறிக் கொக்கரித்தோம்!

பெரிதாய் விழுந்தோம் - சிறிதே
காயமுற்றோம் - மீண்டெழுந்து
காயத்தின் பெருமையைச்
சுவைத்தோம் - பசி
கொண்ட அட்டைகளுக்குத்
தானமும் அளித்தோம்!

உயிர் கொன்றோம்
சிவனானோம் - அதை
உணவாய்ப் படைத்து
பிரம்மனும் ஆனோம்!

வெட்டியாய்ப் பேசினோம் - விவரங்கள்
அறிந்தோம் - விளக்குகள்
அணைந்தும்
மின்மினியால் ஒளிர்ந்தோம்!

கிரீச்சிடும் மரங்கள்,
பெரும்பறவைகளின் பேச்சு,
குறும்பூச்சிகளின் கீச்சு,
அருகாமை அருவியின் கூச்சல்,
குளிர் காற்றின் ஊடல் - இப்பேரமைதியில்
உரக்கவே உறங்கினோம்!

படைத்து வாழ்வளித்த
இயற்கையைப் புகழ்ந்தோம் - செயற்கையைப்
போற்றும் பக்தர்களை இகழ்ந்தோம் - கனவோடு
குளிர் கொஞ்சம்
நெஞ்சுக்குள் அடைத்தோம் - கதிர்
கருக்கும்  நிலமதனை
விரும்பாமல் அடைந்தோம்!

நிஜத்தைச் செலவழித்து
நிழலைச் சேமித்தோம் - மலை
மேக ஊடலைக்
கண்டு  ரசித்துக் கற்று -உடல்
மட்டும் கொண்டு
மனதை விட்டு வந்தோம்!


குறிப்பு: இப்பதிவு நண்பர்களுடனான மூணாறு சுற்றுலாவின் பாதிப்பு.

Wednesday, March 22, 2017

குரு வாழ்த்து

ஐம்பதாம் மேடை கண்ட, பலப்பல திறமைகள் கொண்ட எங்கள் சிலம்பக்கலை குரு தொல்காப்பியன் அவர்களுக்கு சமர்ப்பணம்.

சிலம்பக்கலையின் உருவே, 
தொல்கலையின்  கருவே,
தொல்காப்பியனென்ற  குருவே!

முன் சுற்றில் முன்னேறி, 
பின் சுற்றில் நிலைமாறி!

இரண்டானடியில் நின்று மடங்கி,
உடானில் சட்டென்று நெருங்கி!

சறுக்கியில் சறுக்காமல்,
கிரிக்கியில் கிறங்காமல்!

பகலில் விட்டக்  குத்தில்,
தடையை விட்டுச் சுற்றில்!

தட்டி வந்து நீயடித்தப் பல்டி,
அடிப்  பிடி வரிசைக் கட்டி,
தலைச் சுற்றிச் சாதனைகள் கொட்டி,
இவ்வைம்பதாம் மேடையைத் தட்டி,
வெற்றியுனை அணைக்கும் கட்டி!


குறிப்பு: உடான், அடி பிடி குத்து வரிசை, இரண்டானடி, பல்டி, கிரிக்கி, சறுக்கி, முன் பின் சுற்று, பகல், தலைச்சுற்று, தட்டி வருதல் இவையனைத்தும் சிலம்பக்கலையின் நிலைப்பாடுகள்.