Friday, May 3, 2019

கறிவேப்பிலைக்காரி

சிறுவயது முதலே
அவளை அறிவேன்,
அனுபவத்தைத் தலையிலும்
அகவையை உருவிலும்
கொண்டிருப்பாள்,
ரவிக்கை அணிவதில்லை
வெண்ணிறச் சீலை மட்டுமே,
பக்கத்து வீட்டுக்காரி!

என்னுடைய வரவறிந்தால்
உச்சி வெயிலானாலும்,
பாதங்கள் பொசுங்கினாலும்,
நடுங்கிய நடையதுவும்
தடம் தப்பிப் போனாலும்,
ஓடோடி வந்திடுவாள்!

அவளின் முகம் பார்த்தவுடன்
கவலைகள் கலைந்தோடும்,
நடுங்குமவள் கை தொட்டு
எண்ணங்கள் உறுதி பெரும்,
தூயவளின் ஆசீர்வாதம்
தீய வினைகள் தீர்த்துவிடும்,
பசிநேரம் வந்துவிட்டால்
அவள் குழைத்து வடித்தச்
சோற்றுப் பருக்கைப்
பாசத்தால் பருத்திருக்கும் - இதோ
நானாகிய நாத்திகனும்
அவளாகிய நாராயணனும்
சந்தித்த தருணம்!

வியாழன் தோறும்
புளியம்பட்டிச் சந்தை - அவள்
கறிவேப்பிலையை நுகர்ந்திடவே
கால்கடுக்கக் காத்திருக்கும்.
அன்றவள்
"கறிவேப்பிலை வாங்கலியோ?"
என்றவள் கூவுவதை
ஊரில் கேட்காத ஆளில்லை,
இன்றவள்
கறிவேப்பிலைத் தேகம்
கதறுவதை - அவள்
சிறுநீர் கூடக் கேட்பதில்லை!

நன்செய் நிலமில்லை
தண்டட்டித் தோடில்லை,
ஒற்றைச் சேலையும்
ஒழுகும் வீடும்
ஒண்டிக் குடித்தனமும்தான் - ஆனாலும்
அவளைப்போல் மகிழ்ந்திருந்தவள்
ஊரிலுமில்லை, பாரிலுமில்லை!

காமாலை முற்றி வந்த
மூன்று  வருடக்
குழந்தை என்னை
ஆடு தொடாச் செடியரைத்து
ஆபத்தின்றிக் காத்தாயே,
உன்னுயிர் இன்றுத் தவிக்கையிலேக்
கடவுளாகத் துடிக்கின்றேன்,
அவ்வாறொன்று இல்லையென - சத்தியம்
சம்மட்டியில் அடிக்கிறதே!

ஈயெறும்பு அண்டாமல்
ஈனப்பிறவி ஆகாமல்
இன்றுவரை எனைக்காக்கும் - என்
அப்பத்தா அமத்தா மட்டுமல்ல,
கருவாக எனைத்தாங்கிக்
கலியுகத்தில் சேர்த்திட்ட
என் அன்னை மட்டுமல்ல,
மருத்துவர்கள் கைவிட்டும்
மூலிகைகள் கண்டெடுத்து
என்னுயிரைக் காத்திட்டப்
பாங்கிழவி...
நீயும் என் தாயே!

குறிப்பு: என்னுயிர்க் காத்திட்டப் பக்கத்து வீட்டுப் பாட்டி இன்று மரணப்படுக்கையில்.

No comments: