Saturday, February 22, 2025

கூடல்


அதன் பின் 
யோசித்தேன்,
நீ இல்லையெனில் 
என்னாவேன் என்றெண்ணி - என்
உக்கிரத்தை உதறிவிட்டு 
உன்னிடமே ஓடி வந்தேன் - உன்
மனதளவில் எனை 
மன்னிக்கும் முன் 
கொஞ்சம் கட்டிக்கொள்,
நீ மன்னிப்பது - என் 
மனதுக்குக் கேட்க 
வேண்டுமல்லவா - இப்போதைக்கு
முத்தமெல்லாம்  வேண்டாம்,
இறுகக் கட்டிக்கொள் போதும்,
கொஞ்சம் மூச்சுத் திணறும்
விலகி விடாதே - பிடியை 
விட்டு விடாதே,
முடிந்தால் 
இன்னும் இறுக்கிக் கட்டு - உன் 
அன்பின் அரவணைப்பில்  - என் 
ஆணவங்கள் அழியட்டும்,
விலா எலும்புடன் சேர்ந்து
என் வினையெல்லாம் 
நொறுங்கட்டும் !

Tuesday, January 21, 2025

நிலவு

குளிராய் இதமாய் 
முழுதாய் முடிவாய்
பிறையாய் பிழையாய்  
மஞ்சளாய் சிவப்பாய் 
மதியாய் யுவதியாய்
மழலைக்குக் கதையாய்
மந்திர ஒளியாய் 
காதலின் துணையாய்
கதிரவனின் நட்பாய்
இரவின் கொடையாய்
இருளின் விளக்காய்
ஒளிந்தும் மறைந்தும்
வளர்ந்தும் தேய்ந்தும்,
பாசாங்காய்.. 

நிலவு!




Wednesday, December 4, 2024

வியனுலகு

வியனுலகே  
இனி அவனுலகு - அங்கே 
தூரங்கள் சென்று சென்று 
எல்லைகள் பல கடந்திடுவான் - பின் 
எல்லைகளைப் பொடியாக்கி 
ஓர் உலகம் செய்திடுவான்,
காலத்தின் கணக்குகளைக் 
காலடியில் மிதித்திடுவான்,
தீராத  வினையெல்லாம் 
தீயிலிட்டுப் பொசுக்கிடுவான்,
சாதனைகள் செய்திருந்தும்
சாந்தத்தில் வீற்றிருப்பான்,
மாறி மாறி உருவெடுத்து 
நம்மிடையே வாழ்ந்திருப்பான்,
மகத்தான வெற்றி பெற்று - நம் 
மனங்களிலே நிலைத்திருப்பான்,

அவனுலகு வியனுலகு 
அவனுக்கானது - அவ்வுலகில்  
வலியில்லை 
துயரில்லை,
பிணியில்லை 
பயமில்லை,
கலக்கமில்லை 
கடமையில்லை,
கண்ணீர் என்பது - இனி 
இல்லவே இல்லை,
ஆசைக்கும் அளவில்லை - அதை  
அடைவதற்குத் தடையுமில்லை 
ஆதலால் 
மகிழ்ந்தே இருப்பான் மகிழன்
 வியனுலகில் - இனி 
 என்றென்றும்...

"மகிழ்ந்தே இருப்பான்  மகிழன்"

Friday, March 4, 2022

ஊடல்


வெள்ளமெனப் பாய்ந்துவிட்டு
வெள்ளந்தியாய்ச் சிரிக்கின்றாய்,
வேரறுக்கும் புயலாகி 
வெண்சாமரம் வீசுகின்றாய்,
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்போதே 
கோபக்கனல் வீசுகின்றாய்,
சமாதானமாகி விட்டுச் 
சண்டைக்கு நிற்கின்றாய்,
உயிருக்குள் ஊடுருவி - பெண் 
உள்ளத்தை அளக்கும் கலை 
கடவுளுக்கு வசப்படலாம்,
கரிகாலனுக்கு இல்லையடி!




Sunday, March 7, 2021

வேட்பாளன்

வானிருந்து வந்திடுவான் 
வாசலிலே தவமிருப்பான்,
தயங்கித்தான் நின்றுவிட்டால் 
தாழ்பணிந்து  வணங்கிடுவான்,
தன்மானம் விற்று வைத்தக் 
கூட்டணியைப்  போற்றிடுவான் - உன்
கட்டளைகள் ஏற்று அதைக் 
கடமையெனச் செய்திடுவான்,
யாதும் நீயென்பான்
யாவரும்தான் கேளிரென்பான்,
உத்தமனாய் வேடமிட்டு 
உன்னுரிமை திருடிவிட்டு - உன் 
எதிர்காலம் தொலைத்திருப்பான்,
வெகுளித்தனம் மாறாமல் - நீயும்
வெள்ளந்தியாய்ச்  சிரித்திருப்பாய்!

Saturday, February 27, 2021

சனநாயகம்

தமிழகத்தின் 
தலை மாற - அரசு 
நாளொன்றை 
முரசு கொட்டும்,
குறி சொன்ன அந்நாளில் 
உன் விரலில் - கரை 
வந்து கட்டம் கட்டும், 
இனி
பிரச்சாரப் பீரங்கிகள்
தினம்  வெடிக்கும்,
குரங்குடன் கழுதைகள்  
கூட்டமைக்கும் - உன் 
வாக்கை விழுங்கிவிட்டுக் 
கொட்டடிக்கும்,
வென்றபின் கூட்டில் - வெடி 
வெடிக்கும்,
வெடித்தவுடன் பன்றிகள்  
இனம் சேரும் - பின் 
சனநாயகம்
கொஞ்சம் உதைக்கும், 
கொஞ்சம் கணைக்கும்,
பிறகு மரம் தாவும்,
பிசகி மலம் தின்னும்!

Wednesday, July 15, 2020

பொஞ்சாதி

ஆம்பளங்கறத் திமிருல 
ஆறடிக்கு வளந்திருக்கேன்,
வேலயத் தினங்கட்டிக்கிட்டு - நீ 
வேணாமுன்னு திரிஞ்சிருக்கேன்,
சங்கிலியொன்னுக் கேட்டுப்புட்டா  - சாக்குச்
சொல்லிச் சலிச்சிருக்கேன் 
நோவுல நீ விழுந்தப்போ - நான் 
நோவாம இருந்திருக்கேன் - நீ
கொழந்தையாலத் தவிக்கறப்ப - நான் 
கொரங்காட்டம் போட்டிருக்கேன்!

வேறோருத்தியா இருந்திருந்தா 
வெட்டிக்கிட்டுப் போயிருப்பா - என்
எகத்தாளம் மட்டுமில்ல 
எல்லாத்தையும் தொலச்சிருப்பேன்,
நீயாயிருக்கபோயிப் 
பொறுமையாத்தாம் போயிடற,
பொறுமையா நீ போறதால  - உன்னக்
கொறவா நெனக்கல புள்ள - நீ 
பெருமதான் சேத்துப்புட்ட - நம்மளப்
பெத்துப்போட்டச் சாமிகளுக்கு!

ஆவேசமா வந்து நின்னு 
ஆசையாச் சிரிச்சுடற,
சாய்ச்சுப்புட ஓடி வந்துச் 
சாந்தமாப் பேசிடுற,
இதமாப் பேசிக்கிட்டே 
இடியொன்ன எறக்கிடுற,
சமாதானமாப் போயிட்டுச் 
சண்டைக்கு நின்னுடுற - நான்
செவுடில்லைனுத் தெரிஞ்சிருந்தும் 
சங்கெடுத்து ஊதிடற,
சத்தியமாச் சொல்றம்புள்ள
பத்து வருசத்துக்கப்புறமும் - உன்னக்
கணக்குப் பண்ணத் 
தெரியவே இல்ல!

கோவங்காட்டி முடிஞ்சப்புறம்
கோணலெல்லாங் கொறஞ்சப்புறம்
வலியோட வாழ்ந்தாத்தான் 
வாழ்க்க ருசிக்குமுன்னியே,
அழுகாச்சிய நிறுத்தாம 
ஆசை அம்புட்டுன்னியே, 
கோவத்தெல்லாந் தூரவச்சு
கோலமெல்லாம் போட்டுவச்சு
சொல்றாப்ள சொல்லிருந்தா 
சொக்கியில்ல போயிருப்பேன்,
சொன்னதெல்லாஞ் செஞ்சிருப்பேன்,
தல மேல தூக்கிவெச்சுத்
தக திமி தா ஆடிருப்பேன்!

படிச்சுச் படிச்சுச் சொல்லிப்புட்டா 
பொறுப்பெனக்கு வந்துருமா? 
ஆதிக்கமாப் பேசிப்புட்டா 
அன்புனக்குக் கெடச்சுருமா? - அட 
ஆசவார்த்தச் சொல்லு புள்ள - நான் 
உன்னோட கையிக்குள்ள, 
ஆயிரந்தா இருந்தாலும் - நீதான் 
என் ராணி புள்ள,
பத்துப் புள்ளைங்க ஆனாலும்
பல சென்மம் போனாலும் 
உன்னவிட யாருமில்ல,
உசுருன்னத்  தேடும்புள்ள,
நெஞ்சுக்குள்ளக் கெடந்தாலும் - என் 
நேசமெல்லாம் நெசம்புள்ள,
கொஞ்சங் கடுநெஞ்சானதால - வெளிய 
காமிச்சுக்கத் தெரியவில்ல - ஓடி
வந்து கட்டிக்க புள்ள - என்
கண்ணுக்குள்ள கலங்குதுல்ல!

குறிப்பு: இது எம் பொஞ்சாதிக்குப் பத்தாம் வருசக் கலியாண நாள் பரிசு.