Showing posts with label tamilarasi. Show all posts
Showing posts with label tamilarasi. Show all posts

Monday, June 9, 2014

அதிரதன் (எ) அதிரத்

தமிழும் இலக்கியமும் இளவரசிகளாய் வலம் வர,
முப்பெரும் தேவியராம்..
    சரஸ்வதியின் அன்பும்,
    லட்சுமியின் பண்பும்,
    ஈசுவரத்தின் தாண்டவமும்,
பத்மநாக விக்னேசனருளும் 
அதீதமாய் ரட்சித்திருக்க!
கறியை உண்டுக் காலனை வென்று,
ரவியினொளி சௌந்தரமாய் ஜெகமெங்கும் 
சிந்துவாய்ப் பாய்ந்தோடி,
குமரனும் நடராசனும் மித்திரர்களாய்ப் 
பன்னீரில் கலந்தாடி!
சென்னியான மசினியின் வேர்களுக்கு,
ஜீவனை வார்த்து!
ரங்கராஜாமனிகளுக்கு மலர்கள் தூவி,
பாரதியின் திலீபமெனும் தீ 
அசோகமாய் வளர்ந்திருக்க,
தர்மமெனும் தங்கராஜனுக்குச் சரணடைந்து,
கனகமும் மல்லியும் குருதியில் கலந்தாடி, 
சூரி போல் கூறிய நெறியோடும், 
வினோதமான அன்போடும், 
தரணி ஆளும் திறனோடும்,
மாசில்லா முத்துக்களான 
மகிழக்குஞ்சுகளை ஈன்றெடுத்த,
மோகனச் செல்விகளும் பிரிய வேலன்களும் 
வசந்தத்தில் மலர்ந்திருக்கும்,
அகரக்குடும்பத்தின் ரத்தினத்திலகமான பிரதீபனே!
என் தங்கைத் தமிழின் மகனே! 
என் மருமகன் அதிரதனே!

எங்கள் குடும்பப் பயணத்தை,
பயணமென்ற குருக்ஷேத்ரத்தைத்
தோள் கொடுத்து நடத்த வந்தவனே!


சோழன், சக்கரவர்த்தி மற்றும் 
திலீபர்கள் உண்டென்றாலும்,
கிழக்கின் மத்தியில் உதித்து, 
எங்கள் சேனைக்கு வலு சேர்க்கப் பிறந்தவனே!

அதிரதன் - பல 
ஆயிரம் பேருடன் 
தனித்தே சமர் செய்பவனாம் -அஸ்திரங்கள் 
பல உடையவனாம் - அதிரடிகள் 
பல புரிபவனாம் - சிறந்த 
தேரோட்டியாம் - மிகச்சிறந்த வழிகாட்டியாம்!

அவசியமான பெயர் தானடா உனக்கு -உன் 
பெயரே வாழ்வின் பாதையாகட்டும் - மேன்மையே 
உன் நோக்கமாகட்டும் - உன் வாழ்வே 
காவியமாகட்டும்!

தேடிப் பகை நித்தம் கொண்டு - பல 
வீண் சொல்லுரைத்து - அகங்கார 
முடி சூடி, பிரித்தாளும் வழி தேடி - வயதோடு 
அனுபவத்தை எட்டித்தள்ளி - அடக்குமுறைக்கும் 
அக்கறைக்கும், அதோடு 
பயத்துக்கும் மரியாதைக்கும்
வேறுபாடு அறியாது - வஞ்சத்தில் 
வீழ்ந்து, பாச நேசம் விடுத்து - தன் 
மெய் நாளையே பொய் என்றறியாமல்
மாயத்தில் உழன்று - வேதனையைப்  
பரிசளிக்கும் இவ்வுலகத் 
துரியோதனன்களை வென்று..

அன்பிற்கே சரண்,
உத்தமர்களுக்கே மித்திரன், 
தர்மத்திற்கே ரதன்,
என்ற கொள்கை சூடி,
அதிரதனாய் உன்னை விதைத்து, 
மகாரதனாய் வாழ்ந்து,
ஜெய பேரிகை முழக்கு,
இவ்வுலகை ஒரு கலக்கு, கலக்கு!