Sunday, May 3, 2015

குகைமரவாசிகள்

இந்தப் புவியுடன் நம்முயிர் 
எந்திரமாய்ச் சுழல்வது கண்டு,
மீள்வதில்லை நாம் 
அதனுள் சிக்குண்டு!

அறிவோமா எந்நாள் முக்கிய 
மகுடம் சூடப்போகிறதென்று?
அன்றைய நாள் எக்காளமிட்டது 
அம்மகுடம் சூட்டிக்கொண்டு!

வெகுநாட்களுக்குப் பின்  
மேடை நாடகம் காண அழைப்பு!
கலைப்பசியைப் போக்கிக்கொள்ள 
நன்றிக்கு உரித்தான ஓர் அரிய வாய்ப்பு!

"நாடகமா? கடைசியா எப்போப் பாத்தேன்னே தெரியல. நானும் வரேனே", 
மனையாள் கூட்டானாள்!
"நானி, நானி, நானி!", 
அட! என் மகனும்!
"நான் வரலடா!" 
வீண் திரைகள் வீணடித்த நேரம் பயமுறுத்தியதால், 
தந்தை விலகிக்கொண்டார்!

"ஏங்க, சினிமா பாத்து பழகிட்டோம், நாடகம்... நல்லா இருக்குமா?"
"தூரமா ஒக்காந்தா, மொகந்தெரியுமா? பேசறது கேக்குமா?"
"இப்பெல்லாம் நாடகம் பாக்கறாங்களா? எத்தன பேரு வருவாங்க?"
கேள்வி கேட்கும் இலகுவான  
வேலையைச்  செய்து முடித்தாள்!
என்னில் ஓடிய எண்ண 
ஓட்டத்தையே பிரதிபலித்தாள்!
தெரியாத அறிவியலுக்கு கடவுள் தானே விடை,
(ம்ம்... எந்தக் கடவுள் ?!?!?) 
என் குழப்பத்தை மௌனம் என 
நினைத்து அமைதியானாள்!

நாடகங்களின் முதுகில் 
கூனாக திரைப்படங்கள் ஏறியிருந்த நேரம்!
அறிவியல், பொழுதுபோக்கைப் பெட்டிக்குள்ளும், 
மேடைகளை விட்டத்திலும் அடைத்திருந்த சமயம்!

பழங்கலைகளை பட்டியும் மன்றங்களும் 
மட்டுமே உரையாடின!
மீத நாடக சாகசங்களை நெடுந்தொடர்கள் 
மானபங்கம் செய்தன!

"எப்படி இருந்தாலென்ன? இது ஓர் அறிய வாய்ப்பு, 
கலையைத் தொடு, கவலையை விடு!"
கேட்டுரைக்கும் வயதடையா என் மகனிடம் கிசுகிசுத்தேன்!

குகைமரவாசிகள்!
போராலும் பொருளாதாரத்தாலும் புலம் 
பெயர்ந்த அகதிகளை பற்றியதாம்!
அரங்கம் நிறைந்த கரங்களின் கோஷம் 
அறிமுக உரையை முடித்தது!
மேடையில் காட்சிகள் வரிசையில் நின்றேரியது!
நடிகர்கள் நாடகாசிரியரின் எண்ணங்களை 
ஒலியாலும் உடலாலும் பிரதிபலித்தார்கள்!

புரியாத மொழி, புலப்படாத அசைவுகள், உரத்த இசை..
என்னதான் சொல்ல வருகிறார்கள்? புரியவில்லை!
எனக்கு மட்டுமா? இல்லை அனைவருக்குமா? 
என்றறிய நான் மேடை விட்டு, 
அரங்கம் நோக்கிய... அந்தக்கணம்...

"டம்ம்ம்!" இடியை ஒத்த பெரு ஓசை! 
"ஆஆ!” குலை நடுக்கும் கதறல்!
அச்சம் என் கண்களை அவசர கதியில் 
என்னனுமதியின்றி மூடியது!
நிமிடம் கரைந்தது.. அந்தக்  கதறல்? 
அந்தக் கதறல் யாருடையது?
தேட விழித்தேன்!

வெறுமையான இடம், 

பரிச்சயமானவர் எவருமில்லை!
எங்கே சென்றனர் என்னுடன் வந்தவர்? நானெங்கே?
என்ன இது? நான்.. நான்.. நடுவில்,  
குகைமரவாசிகளின் நடுவில்,
உள்ளே... குகைமரத்தினுள்ளே!

மண்ணையும் மனையையும் 

விட்டுத் துரத்தியடிக்கப்பட்டவர்கள்!
உயிருக்காக உணர்வையும், 
பசிக்காகப் பாசத்தையும் தியாகம் செய்தவர்கள்!

அடுத்த வேளைப் 
பட்டினிச்சாவென்று தெரிந்தும்,
அகோரப் பட்டினியில் 
எலும்புகள் உருகுவது உணர்ந்தும்,
கடைசி ரொட்டியைப் பகிர்ந்துண்டனர்,
அதில் எனக்குமொரு பங்கு!

இந்தச் சுயநல இரட்டைச் சமூகம் 

கொடுத்தக் காயத்திலும்,
பொருளில்லாமலும் ஜாதி ஏற்றத்தாழ்விலும்,
அப்பாவி இயற்கையும் உயிர்களும்,
என்னைச் சுற்றி பலியாகின!
அவர்களுடன் நானும் செய்வதறியாது உழல்கையில்,
மூதாதையர் எலும்பு கொண்டு,
அவரவர் குறையும் வலியும் 
போக்க முயன்றாள் தாய் மூதை!
அவர்கள் கரிய உடம்பின் சிவப்பு ஓலங்கள்,
என்னுயிரை நடுக்கியது!
மறுபடி மூடிக்கொண்டன என் கண்கள்..
நிசப்தம்!

அட! இது என்ன? காதலின் ஒலி கேட்கிறதே,

கவிதைகள் உதிர்கிறதே, 
கனவுகள் பறக்கிறதே,
இந்தச் சூழலிலும் இதற்கிடமுண்டோ?
காணக் கண் விழிக்கையில், 
ஒரு புது உயிர் பிறந்திருந்தது!
நான் நேரில் கண்ட முதல் கடவுள் செயல்!

பொருள் விடுத்து மனிதம் உடுத்தும் 

சமூகத்தை உருவாக்கும் கட்டாயக் கடமையைக்  
குருதியில் கொண்ட விதை!
இன்றைய நாகரீகம் விதைக்க மறந்த விதை!
குவா குவா சத்தம் செவியினில் பாய்ந்தது!
மறுபடி நிசப்தம்!

இப்பொழுது உறைத்தது எனக்கு,

குகையின் ஒவ்வொரு சுவடும், 
நாங்கள் விட்டுச் சென்றவையே!
மரத்தின் ஒவ்வொரு அசைவும், 
எங்கள் ஆன்மாவின் மொழியே!
வாசிகளின் ஒவ்வொரு ஓலமும், 
எங்கள் வேதனையே!
அங்கு அரங்கேறிய ஒவ்வொரு காட்சியும், 
எங்கள்  மனசாட்சியே!
குகைமரவாசிகள் வேறு யாருமல்ல, 
எங்களின் எதிர்கால பிம்பங்களே!

பொருளுக்காக மரபையும் பண்பையும் விட்டெரிந்து,

தன்னை மட்டும் கருத்தில் கொண்டு, 
பணக் கூட்டினில் உழன்று,
பகிர்தலும் உத்தம சமுதாய உருவாக்கமும் மறந்து,
நாகரீக முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு, 
வீண் பெருமை பேசி,
இந்தக்  குகைமரவாசத்திற்கு காரணமான எங்களையே, 
அடையாள அட்டை இல்லாமல், 
காட்டிக்கொடுத்து முகமூடி கிழித்திருந்தனர்!
நிசப்தம்!

ஐயோ! அடுத்தென்ன நடக்கப்போகிறதோ?

எங்களின் எந்த முகமூடி கிழிக்கப்படுமோ?
எந்த இரட்டைத்தனம் சுட்டிக்காட்டப்படுமோ?
எங்கள் சமுதாயம் இன்னும் 
என்ன கொடுமைகளுக்கெல்லாம் காரணமாகுமோ?
பயத்தில் அருகிலிருந்த ஒரு 
பொம்மையைக் கட்டிக்கொண்டேன்!

குகை மரத்தின்  உன்னதத்தை 

வெகு ஜனனம் கொண்டு செல்ல,
நிலை மாறும் மனிதன் போதாது,
நிலை மாறா பொம்மை தான் உதவுமென்று, 
நான் கட்டியிருந்த பொம்மையிடம், 
வழிகளை வாசிகள் போதித்து முடித்த போது,
வெட்கிக் குனிந்திருந்தது என் தலை!
வெறுப்பால் மூடியிருந்தன என் கண்கள்,
முற்றும் இழந்திருந்தேன் என்நிலை!
நிசப்தம்!

அலையென இரைந்த அவ்வோசை, 
என்னிலை உணர்த்தியது!
அதுவே என்னை 
குகைமரத்திலிருந்து விடுவித்தது!
என் இருக்கையில்தான் இறுக்கமாக இருக்கிறேன் 
என்பதை உணர்த்தியது!
அந்தக் கரவோசையில் அரங்கம் அதிர்ந்தது, 
அனைவரும் தெரிந்தனர்!

அப்பாடா.. நிம்மதி! அத்தனையும் பிரம்மையே!
நிமிடங்கள் கரைந்தன..
எங்கே குகைமரவாசிகள்? 
சட்டென மேடை நோக்கினேன்,
குகைமரவாசிகள் வரிசையில் அரங்கத்தை 
வணங்கிக் கொண்டிருந்தனர்!
ஒரு வாசி மட்டும் என்னை ஓரக்கண்ணில் பார்த்து 
விஷமப்புன்னகை புரிந்தான்!
அவன் கையில் என் சட்டையணிந்த
போதனை தாங்கிய பொம்மை!

மிரட்சியுடன் என் கரம் எழுப்பிய கோஷம் 
அரங்கத்தில் மறைந்தது!
கனத்த மனதுடன் என்னுடல் மட்டும் 
நிஜவுலகை தரிசித்தது!

குகைமரத்திலிருந்து விடுபட்டு மாதங்களாகியும்,
அழியவில்லை அவர்கள் வரைந்த ஓவியம்!
அழியாது வாழும் பல காலம் இக்காவியம்!

இப்படியொரு உலகத்தரம் நாடகங்களில் இன்றும் சாத்தியமே. பணமும் பகட்டும் இல்லாமலே ரசிகர்களுள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும், என்று உணர்த்திய நாடகாசிரியர்  "திரு. முருக பூபதி" அவர்களுக்கும், இந்த உன்னத அனுபவத்தை கொடுத்த மணல் மகுடி நாடகக்குழுவினருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

3 comments:

Unknown said...

அருமை கரிகாலன் மாப்ளே
தமிழ் வாக்கியங்கள் வைரமுத்துவை ஞாபகப்படுத்துகின்றன

Manikandan Ponnusamy said...

Too busy today, but your Tamil pulamai made me to read all, keep going kari.

Karikalan said...

நன்றி மாமா,
அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் தானே மாமா,
சாயல் இருக்கத்தானே செய்யும் :-).

நன்றி மணி.