Tuesday, September 30, 2014

எங்கள் தங்கராஜா

"எங்கள் பள்ளிகளில், உங்கள் குழந்தைகளை அனுமதியுங்கள்...!!"
பள்ளி விளம்பரங்கள்
பெற்றோரிடமும், பிரம்மச்சாரிகளிடமும்
பாரபட்சமின்றி வீதியெல்லாம் கெஞ்சிக்கொண்டிருந்தன!

"பண்டிகையப்ப, ஊருப்பட்ட விலை சொல்லுவாங்க, இப்பவே சுண்டல், பொறி, பூ எல்லாம் வாங்கிடலாம் புள்ள...!!"
தீவிர திட்டம் தீட்டின
நடுத்தரக் குடும்பங்கள்!

"ஒரு சல்லை, 40 ரூவா. 2 மொழம் பூ 50 ரூவா. ஒரு பக்கா பொறி 30 ரூவா...!!" 
வாகன இரைச்சலையும்,
ச்சோவெனக் கொட்டிய மழையையும் தாண்டி
மக்களை ஈர்த்தது விற்பவனின் குரல்!

"வண்டிய கழுவி பூஜை  போடனும், ஊருப்பட்ட வேலை இருக்கு, சீக்கிரம் பூஜை பொருள கட்டுப்பா...!!"
லட்சுமி சரஸ்வதி தெய்வங்களோடு சேர்ந்து,
வாழ்வோடு ஒன்றிப்போன ஆயுதங்களும் உயிர்தெழத் தயாராகின!

விடிந்தால்
தசமி விஜயம்!
விழாக்கோலம் பூண்டிருந்தது
கோவை நகரம்!

ஆனால்! எங்களுக்கு மட்டும்,
அப்பண்டிகை விடியல்
இருளாகவே நிலைத்து விட்டது!
எங்கள் குடும்பத்தாருக்கு,
வெளிச்சமெல்லாம் கருமையாகவே தோன்றியது!
தினமுதிக்கும் சூரியனும்,
எங்களிடம் தோற்றோடினான்!
மழை வானிருந்து மட்டுமல்ல,
எங்கள் கண்களிலும் பெய்தது!
வெளியில் மட்டுமல்ல,
வீட்டினுள்ளும் கொட்டியது!

ஆம்! என் அன்பு மாமா
உறங்கிக்கொண்டிருந்தார்...
நிரந்தரமாக!

என் மழலையைத்
தோளில் சுமந்தவரை,
ரத்தச் சொந்தமில்லை என்றாலும்,
என் அத்தைச் சொந்தத்தை பூரனமாக்கியவரை!
என்னரும்புக் குரும்பைத்
தள்ளி நின்று ரசித்தவரை,
என் குழந்தைக் காலம்
நினைவூட்டிச் சிலாகித்தவரை,
என் மகனின் நடையை
விரல் பிடித்து இன்புற்றவரை,
அரசியலுடன் ஆன்மீகமும்,
பகுத்தறிவுடன் தேசப்பற்றும் கொண்டவரை,
மனதார ஊக்குவித்து மகிழ்பவரை,
சாதனை வெறியும் அதிசய தைரியமும்
மேலோங்கி நின்றவரை,
என் நகைக்குச் சுவை கூட்டியவரை,
நித்திரையின் ரகசியம் போதித்த யோகா குருவை,
உயிர் நண்பனொருவனை எனக்கு வரமளித்தவரை,
...மார்பில் குத்தினேன்!

ஆம்! என்னால் இயன்றவரை,
வலிக்குமோ என்று
ஒரு நொடி சிந்திக்காமல்,
இரக்கமற்று இரு கைகளாலும் குத்தினேன்!

எங்கள் நாட்டில் பிரசவம் பார்க்கும்
மருத்துவச்சி சாலைகள்,
நிஜ மருத்துவர்கள் கைவிட்ட பிறகும்,
என்னுடன் இணைந்து என் மாமன் இதயம்
மறுபடி துடிக்கச்செய்து விடாதா என்ற பேராசையில்,
நானிருந்த அவசர ஊர்தியின் வேகத்தில்,
கண்ணீருடன் கதறிக்கொண்டே,
மீண்டும் மீண்டும் குத்தினேன்!

எதுவும் உரைக்கவில்லை அவருக்கு,
எந்தச் சலனமுமில்லை அவரிடம்,
ஒரு பலனுமில்லை இறுதியில்!

அவரின் மெய் பொய்யாய்ப் போயிருந்தது!
பாவம் வாழ்க்கை அவருக்கு தந்த மரண அடி,
என்னுடைய உயிரடியை விடப் பலமானது போலும்!
ஓரம் நின்று அவர் ஆத்மா
என் அறியாமையைப் பார்த்துச்
சிரித்துக்கொண்டிருந்தது!

ஆம்! உறங்கித்தான் போய் விட்டார்
நிரந்தரமாக,
உறுதி வேறு செய்தார்கள்
அனைவரும்!

இல்லை எனக்கு உடன்பாடில்லை!
எங்களில் அவர் நினைவுகள் இல்லையா?
அவர் வித்துக்களில் உயிர் இல்லையா?
அவர் உருவம் மறந்து விடுமா?
இல்லை பாசம் தான் மரத்து விடுமா?

உடல் துறந்த அவர் ஆத்மா
உயிர்த்திருக்கும்!
உயிர்த்திருக்கும் அந்த ஆத்மா
மறுபடி உருவெடுக்கும்!

அந்நாள் வெகு தூரமில்லை,
இன்னும் எட்டு  மாதங்களே!
ராஜனோ ராணியோ
இவ்வுலகில் பிறப்பெடுக்கும்!
அது தங்கராஜனின் மரபைக் கொண்டிருக்கும்,
அன்று அனைவருக்கும் அது
உண்மை உணர்த்தி இருக்கும்!
நீங்கள் உயிருடன்தான் இருக்கிறீர் என்று!

அதுவே இந்நீடித்த இரவைத் தோற்கடிக்கும்,
விடியலை நிரந்தரமாக்கும்!
இனி இருளும் தோற்றோடும்,
உங்கள் மரபு செழித்தோங்கும்!
அது கண்டு உங்கள் ஆன்மா,
மகிழ்வுணர்வில் குளித்து,
பெருமிதத்தில் திளைத்து,
சாந்தி அடையட்டும்!
சாந்தி அடையட்டும்!

4 comments:

Anonymous said...

super na, good tribute to uncle, miss him so much,

MANI said...

மனிதனின் வாழ்வு நிலையற்றது என்பதை அடிக்கடி நமக்கு ஞாபகப்படுத்தவே நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை காலன் கவர்கிறான். இது எல்லோருக்கும் பொதுவான ஒன்றே. தங்கராஜ் அண்ணனின் திடீர் மறைவு நமக்கு ஒரு அதிர்ச்சி. அவர் மீண்டும் சக்குவின் மகனாக பிறப்பார் என்பது உண்மையாகட்டும்.

- இரங்கலுடன் வேலுமணி.

Prabha said...

என் பெரியப்பா வுக்கு சமர்ப்பணம் .....
நீங்கள் இல்லாத இந்த வீடு வெறுமையாக இருக்கிறது...

Karikalan said...

Yes, still could not believe that he is no more.