Wednesday, December 31, 2025

ரகசியம்

பேரிடி,
பெருங்காற்று,
மாமழை,
மகா மின்னல்,
திரள் மேகம் 
திக்கெட்டும் வேகம்,
கும்மிருட்டு 
கூகையின் புரட்டு,
சாயும் மரம்,
சரியும் நிலம்,
ஊடுருவும் குளிர்,
உழலும் பயிர்,
உலுக்கும் ஓசை 
உயிரின் பூசை,
பாயும் வெள்ளம் 
பதறும் உள்ளம்,
சட சடவென 
ஒடியும் மரம்,
கிடு கிடு வென 
நடுங்கும் கரம்,
மோதி மழுங்கும் முனை,
மொழிந்து உடையும் அணை,
தரையிறங்கும் வானம் - அதைத்  
தலையில் ஏந்தியாடும் 
இப்புவியின் 
காலக் கூத்தின் நடுவே - அவன் 
என்னில் ஒட்டிக்கொண்டு - கொஞ்சம் 
இறுகக் கட்டிக்கொண்டு,
தேவ ரகசியம்
ஒன்றை  
மழலையில்
கதைத்திருந்தான்!

No comments: