Monday, October 1, 2018

'அ' முதல் 'அ' வரை

மார்கழியின் குளிர்க்காற்று
மெதுவாக அருகில் வரும்,
இதமாக மெய் வருடிச்
சிலிர்க்கையிலே முகம் வருடும்,
கண்மூடி ரசிக்கையிலே
ஓசையின்றி மடியமரும்,
அளவான உன்னுயரம்
பல மடங்கு கூடிவிடும்,
மாசற்ற நிலையதனை
உனக்குள்ளும் புகுத்திவிடும்,
விடையொன்றைப் பெறாமலே
உனை நீங்கிச் சென்றுவிடும்,
மகளுக்கான உன் இதயம்
களவாடப் பட்டுவிடும்,
இவ்வதீதத்தின் மாயத்தில்
அறிந்தே நீ வீழ்ந்திருந்தும்
விழிக்காமல் நீயிருந்தால்
அக்கனவின் பெயர்
'தீத்தி'.
(அதீத்தி: அதீதத்தின் பெண்பால்; என் மகளாகிப்போன மருமகள்)

கள்ளத்தனமாய் அக்காற்று
காதோரம் கூச்சலிடும்,
மடிமீது அமரென்றால்
தோளேறி முரசு கொட்டும்,
கட்டியனைக்க எத்தனித்தால்
கேள்வியொன்றைக் கேட்டுவிடும்,
பதிலொன்றை உரைக்கும் முன்னே
கடிகாரம் ஓய்ந்துவிடும்,
குறும்புகளின் கூட்டத்தில்
உன் வயதைத் தொலைத்துவிடும்,
தத்தித் தத்தித் தாவி வந்துத்
தரமான முத்தமிடும்,
உன்னுடலின் மையம் தொட்டு
இதயத்தில் குடிகொள்ளும்,
குடிகொண்ட அத்தருணம்
உன்னுயிரது  நீண்டிருந்தால்
அக்கணத்தின் பெயர்
'கரன்'.
(அகரன்: என் புதல்வன், முதல்வன்)

கட்டுக்கடங்கா காற்று அது
உன் திசையெங்கும் ஓடியாடும்,
விசுவிசுவென வீசி அது
விர்ரென்று சீறிப் பாயும்,
பாய்ந்து வந்த வேகத்தில்
மோதிவிட்டு உனைத்தழுவும்,
மோதி மோதி விளையாடி
உன்னுடலோ தரைதட்டும்,
அதன் கன்னங்கள் கடிக்கையிலே
நாணத்தில் முகம் சிவக்கும்,
அதன் பருக்கையிலே கை வைத்தால்
நாணலையும் சாய்த்துவிடும்,
உருண்டோடி உருண்டோடி
உள்ளங்களைக் கோர்த்திருக்கும்,
ஆடி ஆடி வருகையிலே
ஆசையெல்லாம் மறந்திருக்கும்,
மறந்துவிட்ட ஆசையெல்லாம்
பேராசை ஆகும் முன்னே
சட்டென்று மலைமோதி
சட சடவென மழையாகி
உன் அகத்தையது நனைத்திருந்தால்
அந்நிகழ்வின் பெயர்
'திரதன்'.
(அதிரதன்: என்னருமை மருமகன்)

பரந்தாமன் மூச்சுக்காற்று
புதிதாகப் பிறந்திருக்கும்,
பிஞ்சு விரலையாட்டி ஆட்டி
இனம்புரியா இசையமைக்கும்,
மூச்சின் மணமதுவோ
மூவுலகைச் சுற்றவைக்கும்,
பிஞ்சுத் தும்மல்கள்
தீர்த்தங்கள் தெளித்திருக்கும்,
மழலை மயிர் கொண்டு
மந்திரமாய் உனை வருடும்,
உன்னிலையும் மழலையானால்
நிதானமாய்ச் சிரித்துவிடும்,
இமைக்காமல் நீயிருந்தும்
அறியாமல் தொட்டுவிடும்,
தொட்டுவிட்ட மாத்திரத்தில்
நீ கடவுளாகிப் போயிருந்தால்
அவ்வுணர்வின் பெயர்
'தியன்'.
(அதியன்: என் மகன், என் அப்பன், இளையவன்).

எங்கள் குடும்பத்தின் பக்கங்கள்
உயிரெழுத்தில் அச்சாகும்,
எங்கள் வாழ்வின் குறிப்பெல்லாம்
அகரத்தில் எழுதப்படும்,
இனி எங்கள் இதயமென்றும்
'' வென்றே துடித்திருக்கும்.

No comments: