Monday, October 1, 2018

'அ' முதல் 'அ' வரை

மார்கழியின் குளிர்க்காற்று
மெதுவாக அருகில் வரும்,
இதமாக மெய் வருடிச்
சிலிர்க்கையிலே முகம் வருடும்,
கண்மூடி ரசிக்கையிலே
ஓசையின்றி மடியமரும்,
அளவான உன்னுயரம்
பல மடங்கு கூடிவிடும்,
மாசற்ற நிலையதனை
உனக்குள்ளும் புகுத்திவிடும்,
விடையொன்றைப் பெறாமலே
உனை நீங்கிச் சென்றுவிடும்,
மகளுக்கான உன் இதயம்
களவாடப் பட்டுவிடும்,
இவ்வதீதத்தின் மாயத்தில்
அறிந்தே நீ வீழ்ந்திருந்தும்
விழிக்காமல் நீயிருந்தால்
அக்கனவின் பெயர்
'தீத்தி'.
(அதீத்தி: அதீதத்தின் பெண்பால்; என் மகளாகிப்போன மருமகள்)

கள்ளத்தனமாய் அக்காற்று
காதோரம் கூச்சலிடும்,
மடிமீது அமரென்றால்
தோளேறி முரசு கொட்டும்,
கட்டியனைக்க எத்தனித்தால்
கேள்வியொன்றைக் கேட்டுவிடும்,
பதிலொன்றை உரைக்கும் முன்னே
கடிகாரம் ஓய்ந்துவிடும்,
குறும்புகளின் கூட்டத்தில்
உன் வயதைத் தொலைத்துவிடும்,
தத்தித் தத்தித் தாவி வந்துத்
தரமான முத்தமிடும்,
உன்னுடலின் மையம் தொட்டு
இதயத்தில் குடிகொள்ளும்,
குடிகொண்ட அத்தருணம்
உன்னுயிரது  நீண்டிருந்தால்
அக்கணத்தின் பெயர்
'கரன்'.
(அகரன்: என் புதல்வன், முதல்வன்)

கட்டுக்கடங்கா காற்று அது
உன் திசையெங்கும் ஓடியாடும்,
விசுவிசுவென வீசி அது
விர்ரென்று சீறிப் பாயும்,
பாய்ந்து வந்த வேகத்தில்
மோதிவிட்டு உனைத்தழுவும்,
மோதி மோதி விளையாடி
உன்னுடலோ தரைதட்டும்,
அதன் கன்னங்கள் கடிக்கையிலே
நாணத்தில் முகம் சிவக்கும்,
அதன் பருக்கையிலே கை வைத்தால்
நாணலையும் சாய்த்துவிடும்,
உருண்டோடி உருண்டோடி
உள்ளங்களைக் கோர்த்திருக்கும்,
ஆடி ஆடி வருகையிலே
ஆசையெல்லாம் மறந்திருக்கும்,
மறந்துவிட்ட ஆசையெல்லாம்
பேராசை ஆகும் முன்னே
சட்டென்று மலைமோதி
சட சடவென மழையாகி
உன் அகத்தையது நனைத்திருந்தால்
அந்நிகழ்வின் பெயர்
'திரதன்'.
(அதிரதன்: என்னருமை மருமகன்)

பரந்தாமன் மூச்சுக்காற்று
புதிதாகப் பிறந்திருக்கும்,
பிஞ்சு விரலையாட்டி ஆட்டி
இனம்புரியா இசையமைக்கும்,
மூச்சின் மணமதுவோ
மூவுலகைச் சுற்றவைக்கும்,
பிஞ்சுத் தும்மல்கள்
தீர்த்தங்கள் தெளித்திருக்கும்,
மழலை மயிர் கொண்டு
மந்திரமாய் உனை வருடும்,
உன்னிலையும் மழலையானால்
நிதானமாய்ச் சிரித்துவிடும்,
இமைக்காமல் நீயிருந்தும்
அறியாமல் தொட்டுவிடும்,
தொட்டுவிட்ட மாத்திரத்தில்
நீ கடவுளாகிப் போயிருந்தால்
அவ்வுணர்வின் பெயர்
'தியன்'.
(அதியன்: என் மகன், என் அப்பன், இளையவன்).

எங்கள் குடும்பத்தின் பக்கங்கள்
உயிரெழுத்தில் அச்சாகும்,
எங்கள் வாழ்வின் குறிப்பெல்லாம்
அகரத்தில் எழுதப்படும்,
இனி எங்கள் இதயமென்றும்
'' வென்றே துடித்திருக்கும்.

Monday, June 11, 2018

தீர்க்கத்தான்

குறிப்பு: Hackathon-ன் தமிழ்ப் பதிப்பிற்கு FORGE "தீர்க்கத்தான் (to solve)" எனப் பெயரிட்டதும், அதைப் பறைசாற்ற எழுதிய சில வரிகள்.

தடையில்லாத் தடங்கல்கள் 
தீர்க்கமான சிக்கல்கள்  - என 
வளர்ந்தோங்கிய இக்குறையை, 
உன் அறிவு, உன் கனவு,
உன் கல்வி, உன் கணினி,
உன் சக்தி, உன் யுக்தி 
கொண்டதனைத் 
தீர்க்கத்தான்!

உன்னுள் எரியும் அக்கினிக்குஞ்சு - உனைத் 
தீண்டாமல் அணையும் முன்னே  
பிழம்பாகி  முழங்காதோ?
ஒரு சாதனை புரியாதோ?
என்றவுன் தேடல்  
தீர்க்கத்தான்!

என்னுடைய யுக்தியது
இடர் கொய்யும் கத்தியது - அதை 
ஆக்கத்துடன் ஆள்வேனா? - இல்லை 
அழுத்தத்தில் அமிழ்வேனா?
களமாடி வெல்வேனா? - வெறும் 
காரணம் தான் சொல்வேனா? 
என் சொல் கேட்கும் எந்திரமா? - இல்லை 
என் மனமாடும் தந்திரமா? 
தொழிலடிமை ஆவேனா? - இல்லை 
தொழிலதிபர் ஆவேனா?
என்றுன்னை ஆட்டுவித்த  - ஐயங்களைத்
தீர்க்கத்தான்!

ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் 
அமிழுது என் மூத்தக்குடி,
தீண்டாமைப் பாவச்செயல் 
மொழியினிலும் படரும் கொடி,
தாய்மொழி மட்டும் உரைத்திட்ட 
சாதனையாளர் பல கோடி,
இவ்வுண்மை உணராமல் 
மோகத்தில் மூழ்கடித்தத்
தீண்டாமைத் தீயதனைத்  - தீயிலிட்டுத் 
தீர்க்கத்தான்!
  
கணக்கற்றத் திசைகளிலே 
பயணித்துப் பயின்றாலும்,
இணையத்தின் போதனையோ 
இதயத்தைத் தொடுவதில்லை,
கற்றறியும் அத்தனையும்  கையளவேயானாலும்
இதயத்தைத் தொட்டுவிடும் 
அத்தருணம் வாராதோ?
தருணமது வந்துவிட்டால் - என் 
தரித்திரங்கள் தீராதோ?
என்றவுன் வேட்கைதனைத்
தீர்க்கத்தான்!

தீர்க்கத்தான்
(தீர்வை எடு, தீர்த்து விடு!)

Saturday, June 2, 2018

முதல் சுற்று

குறிப்பு: மகனின் கோடை கால நீச்சல் பயிற்சி இன்று நிறைவடைந்தது, அதைப்பற்றி  சில வரிகள். பயிற்சியாளர்: நவநீதன்.

நவநீதன் வழி எடுத்து
ஆதவனின் ஒளி பிடித்து - ஆதி
அந்தம் தனை மறந்து
சுவாசத்தைச் சிறையிட்டு
நீரினிலே கற்ற கலை!

அச்சமில்லா ஒரு சிறுவன்,
அதைக்கொண்ட இன்னொருவன்,
அழுகையுடன் மற்றொருவன்,
அக்கறையில் சாடும் சிலர்,
கரைதனிலே ஓடும் சிலர்
என்றோடிய காலமது!

ஈரைந்து மாதங்கள்
தவமிருந்து பெற்ற கரு,
வீணாகிப் போகாமல்
மீனாகிப் போனதொரு
அதிசயத்தைக் காணக் காணத்
தெவிட்டாமல் மனதிலொரு
கர்வத்தைச் சூடிக்கொண்டப்
பெற்றவரோ ஐந்தாறு!

மாரியுடன் முடிந்திட்ட
சித்திரையின் வெயிலோடு,
தடதடவென ஓடிவிட்ட
பயிற்சியது முடிந்தாலும்,
நீரினுள்ளே கற்றறிந்த
நம் முயற்சிக்கிது முற்றல்ல!

தினமொருமுறை முழுகிடுவோம்,
நீரினிலே கலந்திடுவோம்,
உயிர் நினைப்பு வருகையிலே
உச்சிதனை  அடைந்திடுவோம்,
அகரத்தில் நின்றுகொண்டு
வெற்றிதனைச் சுவாசிப்போம்,
நம் முயற்சிக்கிது முற்றல்ல,
நம் சாதனைகளின்
முதல் சுற்று!

Wednesday, May 9, 2018

அதியன்


பிஞ்சு விரலின் அழுத்தத்தில் 
நிதானச் சிரிப்பில்,
மூச்சின் மணத்தில்,
அறியாத் தொடுதலில்
இமைக்கா நொடிகளில்,
உன் இதயம் ஒரு கனம் 
துடிப்பதற்கு மறந்திருந்தால்  
அவ்வுணர்வின் பெயர் 
 'அதியன்'.

Thursday, January 4, 2018

முன்னாள் காதலி

நானறியா நேரத்தில்
பின்னிருந்துக் கட்டியென்னைக்
களவாடும் பொழுதினிலே - தொலைந்திட்ட
உன் அச்சம்!
இல்லையென நானுரைத்தும்
உண்டென்று வாதிட்டு
மஞ்சத்தில் நிகழ்த்திவிட்டு - மன்றாடிய
உன் ம(கு)டம்!
சுற்றம் பல சூழ்ந்திருந்தும்
சற்றும் அதை நோக்காமல்
இதழுக்குள்  இதழ் புதைத்து - அகதியான
உன் நாணம்!
பல பேரின் பந்தம் நீ
இருட்டினில் என் சொந்தம் நீ,
கணவனில்லை என்றாலும் - எனைக்
கட்டித் தழுவுகையில் - பறந்தோடிய
உன் பயிர்ப்பு!

இந்நாற்குணத்தின் லட்சணத்தில்
பருவத்தின் நாள் முதலே - மயங்கித்தான்
போயிருந்தேன்,
நிறங்களுக்கும் அடையாளம்  - உண்டென்று
உணர்ந்திருந்தேன்!
எண்ணியவை முடித்துவிட்டு
உன்னிடம் நான் கலக்கையிலே
எண்ணாததை முடித்துவிடும் - கனவுலகில்
வாழ்ந்திருந்தேன்!

இங்கிதமே தெரியாமல்
மோகத்தை நீ வேண்டுகையில்
அலுவலையும் பாராமல்
நள்ளிரவின் துணையின்றி - உன்
இச்சை தீர்த்தேனே!
பெற்றோரின் சொல் மறுத்து
கல்வியையும் காணாமல்
காதல் மட்டும் குறியாக்கி
உனைச் சேரும் நோக்குடனே - பேதலித்து
அலைந்தேனே!

என்ன குற்றம் நானிழைத்தேன் - எனை
நீயும் விட்டுச் சென்றாய்?
வேண்டியுனை நான் அழைத்தும் - செவி
சாய்க்க மறுக்கின்றாய்,
கோடை மழை ஆனாயே - குறிஞ்சிப்
பூ ஆவாயோ?

என் அலுவல் நேசித்து - உன்
உடைமை மறந்தேனா?
இரண்டாவது மணம் புரிந்து - உன்
உரிமை மறுத்தேனா?
என்ன குற்றம் நானிழைத்தேன் - என்
விழி மோதி உரைத்துவிடு - என்
புத்திக்கு உணர்த்திவிடு!

என் தந்தையுடன் என் தாயும்
என் தங்கையுடன் என் சேயும்
மனையாளும் அவள் கருவும் - எனச்
சொந்தங்கள் பலவிருந்தும்
நீயின்றி உலகில்லை - எனைக்,
கனவுலகில் இருத்திவிட்டுக்
கனவாகிப் போனாயே!
உனை நினைத்து - என்
விழிகள் கோடை மழைக்
கொட்டுதடி,
என் கண்ணீரின் கொள்ளளவு - கொஞ்சம்
கரைந்துதான் போனதடி,
நீயில்லா விடியல்கள்
கருப்பு வெள்ளையானதடி!

எனக்கிருப்பது ஒரு மெய்யே - அது
பொய்யாகிப் போகும்முன்
என்னிடமே திரும்பிவிடு!
உனக்கென்றொரு விதி செய்தே  - அதைத்
தவறாமல் காத்திடுவேன்
என்னனுமதி கேளாமல்
உன்னுரிமை கொண்டாடு!
உன்னுள் எனை மூழ்கடித்து  - உன்
வஞ்சத்தைத் தீர்த்துவிடு!
என் உயரம் என் துயரம்
என் கர்வம் என் செல்வம்
என் சருமம் என் கருமம்
என் காயம் அதன் வலிகள்
அத்தனையும் மறக்கச்செய்
கட்டிலிலே யுத்தம் செய் - கலவி
கொண்டெனைச் சுத்தம் செய்!

என் மனையாள் யாதுரைப்பாள்
என்றெண்ணித் தயங்காதே
என் நலனைத் தினம் விரும்பும் - அவள்
இக்கால நளாயினியே!
ஓருடலாய் ஒருயிராய்
இச்சுவர்க்க வாழ்வதனை
நாமிருவர் வாழ்ந்திடவே
இமை மூடாத் தவமதனைப் - பல
காலம் புரிகின்றேன்!

மயக்கும் மஞ்சள் நிலவொளியில்  - தினம்
ஆரத்தழுவிக் கலந்துவிடு,
தினமொருமுறைக் கருவுற்று - எனக்குப்
புத்துயிரை அளித்துவிடு,
உன்னுறவைக் கொண்டாட
என்னாயுள் கூட்டியொரு
வரமொன்றைக் கொடுத்துவிடு
எனதாருயிர்
நித்திரா தேவியே!