Tuesday, July 2, 2013

அகரன்

கரத்தினால் தொட்டெழுதி 
நெடு நாட்களாகி விட்டது 
தமிழில் - ஆனால் 
அருமைத்தமிழ் தரமாகவுள்ளது 
மனதில்!

எப்படி மறப்பேனென் 
தமிழின் சொல் அடி - என்னன்னைத் 
தமிழ் கல்மண் 
தோன்றாக் காலத்து 
மூத்தக்குடி!

அடடே! தமிழ் மீது 
அவ்வளவு பற்றோ?
இல்லை - இது  பற்றல்ல 
பரிசு!

என்னிந்த எண்ண ஓட்டத்தை 
முறையாகப் பிரசவிக்க - என் 
தாய்மொழி தவிர 
வேறு எதை 
நான் யோசிக்க !?

தங்களைப்போல் நானும் 
நினைப்பதுண்டு - காலச்சவாரி 
செய்யவொரு காலக்குதிரை 
வேண்டுமென்று!

எதிர்காலம் சுற்றுவதால் 
பறி போய்விடும் சுதந்திரம் - இறந்த 
காலத்தில் இறக்காத 
நினைவுகளைச் சுற்றுவதுதானே 
நிரந்தரம்?

அப்படி இறக்காத நினைவுகளில் 
தேடியும் கிடைக்கவில்லை - நான் 
பிறந்தபோது என் தந்தையின் 
உணர்ச்சி எல்லை!

என் தாய் 
மறுபிறப்பின் வாயிலில் 
இருந்தபோது - அவருள்ளம் 
நடுங்கியதா?
என்னை முதலில் 
ஏந்திய போது - அவர் 
கண்கள் நீர்த் துளிர்த்ததா?
முத்தமிட்ட போது - உடல் 
சிலிர்த்ததா?
தொட்டிலிட்ட போது  - பாவணை 
தடுமாறியதா?
ஒரு கவிதை புனைந்த களிப்பா? 
அல்லது 
மக்கள் தொகையைக் கூட்டியத் தவிப்பா?

இறக்காத என் நினைவுகளில் 
தேடியும் கிடைக்கவில்லை - என்னை
ஈன்ற போதிருந்த என் தந்தையின் உணர்ச்சி எல்லை!

இதை நான் ஒரு 
குறையாகக் கருதவில்லை - இருந்தும்
அத்தேடலை நிறுத்த என்னால் இயலவில்லை!

இந்தத் தேடலுக்கு 
அமையாதா ஒரு முற்று - 
என்றெண்ணி எண்ணிக் 
களைத்திருக்கையில் சற்று - 
விடையொன்று கொடுத்தது 
ஆனி பதினெட்டு - 
எங்கள் குடும்பத்தில் உதித்தது 
'அகரன்' எனும் மொட்டு - 
அவன் வழி என் தந்தையின் 
உணர்ச்சி எல்லையை எட்டு!

அவன் பிஞ்சு 
விரல்களைத் தீண்டிய அந்த 
நிமிடம் - என் 
சிரசில் ஏறியிருந்தது 
கர்வமெனும் 
மகுடம்!

அவன் ஸ்பரிசத்தை 
உணர்ந்த அந்தப் 
பொழுது - என் 
மனதில் துளிர் விட்டது 
தந்தை எனும் 
விழுது!

அவன் மூச்சுக்காற்று 
என்னை உரசிய அந்த 
நேரம் - உணர்ச்சி 
வெள்ளத்தில் கழுவி 
எறியப்பட்டிருந்தது என் 
வக்கிரம்!

அவன் பால் 
வதனம் நோக்கிய அந்த 
நொடி - என்னுடம்பில் 
உற்பத்தியான அணுக்கள் 
கோடி கோடி!

மகனைப் பெற்றேனா - அல்லது 
நான் மறுபடி பிறந்தேனா?
தந்தை ஆனேனா - அல்லது 
என் தந்தையை உணர்ந்தேனா?

அளவில்லா உணர்ச்சியில் என் நரம்புகளும்,
சொல்லவொண்ணா வார்த்தைகளில் என் தமிழும்,
கட்டிலடங்கா ஓட்டத்தில் என்னுதிரமும்,
துடிக்க மறந்த இதயமும்,
துடியாய்த் துடித்த என் மனதும்,
நடுக்கத்தைப் போர்த்திய என்னுடலும்,
அதன் சுயநிலை விட்டுக் 
கோட்பாடுகளை மீறிய சமயம் -  தீர்ந்தது 
என் நெடுங்கால ஐயம்!

நான் உதித்த போது 
என் தந்தையின் 
உணர்ச்சி எல்லை - அறியவில்லை 
என்ற பழுது 
இனி என் மனதில் 
இல்லை!

ஆனி பதினெட்டா 
என் தேடலுக்கு முற்று - இல்லையில்லை 
இனிதான் ஆரம்பம் 
என் வாழ்கையில் 
பற்று!

காலக்குதிரையின் சவாரியில் 
அமைப்பேன் என் 
மகனுடன் கூட்டு -அத்துனையும் 
அடைவேன் அவனுடன் வீறு நடை 
போட்டு! 

என் தந்தையை 
உணரவைத்த புதல்வனே - எனக்கு 
தந்தையெனும்  கர்வத்தை 
சூட்டிய முதல்வனே - இன்றும் 
என்றும் நீதான் எங்கள் 
அகரனே!