Sunday, March 7, 2021

வேட்பாளன்

வானிருந்து வந்திடுவான் 
வாசலிலே தவமிருப்பான்,
தயங்கித்தான் நின்றுவிட்டால் 
தாழ்பணிந்து  வணங்கிடுவான்,
தன்மானம் விற்று வைத்தக் 
கூட்டணியைப்  போற்றிடுவான் - உன்
கட்டளைகள் ஏற்று அதைக் 
கடமையெனச் செய்திடுவான்,
யாதும் நீயென்பான்
யாவரும்தான் கேளிரென்பான்,
உத்தமனாய் வேடமிட்டு 
உன்னுரிமை திருடிவிட்டு - உன் 
எதிர்காலம் தொலைத்திருப்பான்,
வெகுளித்தனம் மாறாமல் - நீயும்
வெள்ளந்தியாய்ச்  சிரித்திருப்பாய்!

Saturday, February 27, 2021

சனநாயகம்

தமிழகத்தின் 
தலை மாற - அரசு 
நாளொன்றை 
முரசு கொட்டும்,
குறி சொன்ன அந்நாளில் 
உன் விரலில் - கரை 
வந்து கட்டம் கட்டும், 
இனி
பிரச்சாரப் பீரங்கிகள்
தினம்  வெடிக்கும்,
குரங்குடன் கழுதைகள்  
கூட்டமைக்கும் - உன் 
வாக்கை விழுங்கிவிட்டுக் 
கொட்டடிக்கும்,
வென்றபின் கூட்டில் - வெடி 
வெடிக்கும்,
வெடித்தவுடன் பன்றிகள்  
இனம் சேரும் - பின் 
சனநாயகம்
கொஞ்சம் உதைக்கும், 
கொஞ்சம் கணைக்கும்,
பிறகு மரம் தாவும்,
பிசகி மலம் தின்னும்!

Wednesday, July 15, 2020

பொஞ்சாதி

ஆம்பளங்கறத் திமிருல 
ஆறடிக்கு வளந்திருக்கேன்,
வேலயத் தினங்கட்டிக்கிட்டு - நீ 
வேணாமுன்னு திரிஞ்சிருக்கேன்,
சங்கிலியொன்னுக் கேட்டுப்புட்டா  - சாக்குச்
சொல்லிச் சலிச்சிருக்கேன் 
நோவுல நீ விழுந்தப்போ - நான் 
நோவாம இருந்திருக்கேன் - நீ
கொழந்தையாலத் தவிக்கறப்ப - நான் 
கொரங்காட்டம் போட்டிருக்கேன்!

வேறோருத்தியா இருந்திருந்தா 
வெட்டிக்கிட்டுப் போயிருப்பா - என்
எகத்தாளம் மட்டுமில்ல 
எல்லாத்தையும் தொலச்சிருப்பேன்,
நீயாயிருக்கபோயிப் 
பொறுமையாத்தாம் போயிடற,
பொறுமையா நீ போறதால  - உன்னக்
கொறவா நெனக்கல புள்ள - நீ 
பெருமதான் சேத்துப்புட்ட - நம்மளப்
பெத்துப்போட்டச் சாமிகளுக்கு!

ஆவேசமா வந்து நின்னு 
ஆசையாச் சிரிச்சுடற,
சாய்ச்சுப்புட ஓடி வந்துச் 
சாந்தமாப் பேசிடுற,
இதமாப் பேசிக்கிட்டே 
இடியொன்ன எறக்கிடுற,
சமாதானமாப் போயிட்டுச் 
சண்டைக்கு நின்னுடுற - நான்
செவுடில்லைனுத் தெரிஞ்சிருந்தும் 
சங்கெடுத்து ஊதிடற,
சத்தியமாச் சொல்றம்புள்ள
பத்து வருசத்துக்கப்புறமும் - உன்னக்
கணக்குப் பண்ணத் 
தெரியவே இல்ல!

கோவங்காட்டி முடிஞ்சப்புறம்
கோணலெல்லாங் கொறஞ்சப்புறம்
வலியோட வாழ்ந்தாத்தான் 
வாழ்க்க ருசிக்குமுன்னியே,
அழுகாச்சிய நிறுத்தாம 
ஆசை அம்புட்டுன்னியே, 
கோவத்தெல்லாந் தூரவச்சு
கோலமெல்லாம் போட்டுவச்சு
சொல்றாப்ள சொல்லிருந்தா 
சொக்கியில்ல போயிருப்பேன்,
சொன்னதெல்லாஞ் செஞ்சிருப்பேன்,
தல மேல தூக்கிவெச்சுத்
தக திமி தா ஆடிருப்பேன்!

படிச்சுச் படிச்சுச் சொல்லிப்புட்டா 
பொறுப்பெனக்கு வந்துருமா? 
ஆதிக்கமாப் பேசிப்புட்டா 
அன்புனக்குக் கெடச்சுருமா? - அட 
ஆசவார்த்தச் சொல்லு புள்ள - நான் 
உன்னோட கையிக்குள்ள, 
ஆயிரந்தா இருந்தாலும் - நீதான் 
என் ராணி புள்ள,
பத்துப் புள்ளைங்க ஆனாலும்
பல சென்மம் போனாலும் 
உன்னவிட யாருமில்ல,
உசுருன்னத்  தேடும்புள்ள,
நெஞ்சுக்குள்ளக் கெடந்தாலும் - என் 
நேசமெல்லாம் நெசம்புள்ள,
கொஞ்சங் கடுநெஞ்சானதால - வெளிய 
காமிச்சுக்கத் தெரியவில்ல - ஓடி
வந்து கட்டிக்க புள்ள - என்
கண்ணுக்குள்ள கலங்குதுல்ல!

குறிப்பு: இது எம் பொஞ்சாதிக்குப் பத்தாம் வருசக் கலியாண நாள் பரிசு.

Monday, May 25, 2020

இயற்கை

பரந்திருக்கும் உலகு
பாசாங்காய் நிலவு,
வலம்புரிச் சங்கு
வானிருக்கும் கங்கு,

அக்கினியின் புதிர்
ஆதவனின் கதிர்,
வெற்றிடத்தின் குணம்
வேர்களின் மணம்,

நிலத்தின் பருவம்
நீரின் கருவம்,
கல்லின் உருவம்
காற்றின் அருவம்,

உடும்பதனின் தேகம்
ஊரறியாக் காகம்,
பகலிரவு ஆட்டம்
பாம்பதனின் பாட்டம்,

தொட்டால் சிணுங்கியும்
தோளாடும் குருவியும்,
மண்புழுவின் உணவும்
மானிடரின் கனவும்,

புழுவும் பூச்சியும்
பூதங்களின் சாட்சியும்,
புலியும் பூனையும்
அவ்விரண்டின் மொழியும்,

சிலிர்த்துக்கொண்ட இலையும்
சிலந்தியிட்ட வலையும்,
வெப்பமும் குளிர்ச்சியும்
குளிரை வென்ற  குரங்கும்
குரங்கதுவின் சிரிப்பும் - குன்றாத
கடலும் வியர்வையும் கண்ணீரும்,
இம்மூன்றின் சுவையும்,

தின்றொழிக்கும் கறையானும்
கொன்றொழிக்கும் கொரோனாவும்
கொரோனாவைப் படைத்த மனிதனும்,
மனிதனாகிய  நீயும்
இன்னொருவன் நானும்
இயற்கையே!

Tuesday, February 18, 2020

கலங்கரை விளக்கம்

இன்றல்ல நேற்றல்ல
வருடங்கள் கணக்கல்ல,
தங்கத்தால் வந்ததல்ல
தழுவிக்கொண்டே நின்றதல்ல,
சூதுகளால் சுழன்றதல்ல
சூத்திரத்தால் பணிவதல்ல,
தர்க்கத்தின் தலையல்ல
தரத்திற்கு நிகரல்ல,
தவமாகிப்போன அது - உன்
அன்பன்றி வேறல்ல,
தவமிருந்து பெற்றோமே
தவமிருந்து பெற்றோமே,
தவமிருந்து பெற்றதனால்  - உன்
அன்பு வெறும் கடலல்ல
அது எங்கள்
கலங்கரை விளக்கம்!

குறிப்பு: வேலுமணி மாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Sunday, December 29, 2019

தேர்தல்

சந்தர்ப்பவாதத்தின் உச்சம்,
சகுனித்தனத்தின் எச்சம்,
விடியலின் கல்லறை - உன்
விந்தின் முடிவுரை,
கரைகட்டியத் திருவோடுகள்
கலைகட்டியுன் வாழ்வதனை
வேட்டையாடும் விளையாட்டு,
தேர்தல்!

Tuesday, October 1, 2019

அகரன் காடு

அழகிய காடுதான் அது
விசித்திரக் குணங்கள் கொண்டது,
நிறங்களும் அவ்வாறே,
புதிரூற்றி வளர்க்கப்பட்டது,
புரியாத புதிரது  - ஆனாலும்
அழகிய காடுதான் அது
அரசன் அவனென்பதால்!

இங்கு
மரங்களில் மண்வாசம் வீசும்
மீன்கள் விளையும் - உலுக்கினால்
கேள்விகள் உதிரும் - விதைத்தவுடன்
கனி கிடைக்கும்,
செடிகள் முட்டையிடும் ,
முட்கள் கதை சொல்லும்,
மூன்று கால்களுடன்
முயலே வேட்டையாடும்!

தவறுகள் தெரிந்தே செய்யப்படும்,
திருத்தங்களுக்கு நேரமில்லை,
தூங்கி எழுந்தாலே
அழுக்குகள் நீங்கும் - தூவானம்
தூய அன்பைக் கொட்டும்,
தூரத்து இடி முழக்கம்
துள்ளிக் கழுத்தைக் கட்டும்!

மீன்களெல்லாம்  - அவன்
இலட்சினையைக் கொண்டிருக்கும்,
கரடிகள் கதை சொல்லும்
கட்டியும் உருளும்.
மேகங்களைத் தின்னலாம்,
மூக்கின் பொருத்தம் பார்த்தே
திருமணங்கள் நடைபெறும்,
வாந்தி வயிற்றுக்குள்ளும்
எடுக்கப்படும்,
சிரிப்புகள் சினமாகும்
சினம் நகைப்பூட்டும்,
புலி புல் மேயும்
புற்கள் புலவு உண்ணும்,
பறக்கப் பழகலாம் - ஆனால்
புசிப்பது பாவச்செயல்!

இக்காட்டில்
கூகுளுக்கும் பசி எடுக்கும் - அது
செய்தியைத்தான் தின்னும்,
ரசம் கடலாகும்
கடல் கடுகாகும்,
அம்மனங்கள் அசிங்கமில்லை
ஆடையே அவமானம்,
ஆருடங்கள் பலிப்பதில்லை
ஆசைகள் மட்டுமே,
அறிமுகங்கள் வெட்கத்தில் முடியும்,
நடிகர்கள் இல்லாமலே
நாடகங்கள் அரங்கேறும்,
அரங்கங்கள் இல்லாமலே
அம்புலிமாமா கதை சொல்லும்!

சாதிகள் இல்லை
சாத்திரங்கள் இல்லை
கடவுளும் இல்லை
கடமையும் இல்லை - ஆனால்
சாதனைகளனைத்தும் சாத்தியமே,
பெண்ணென்று யாருமில்லை
ஆணென்றும் எவருமில்லை
அன்பே அடிப்படைத் தகுதி,
அறம் என்பது
அறியப்பட வேண்டிய ஒன்று!

விசித்திரக் குணங்கள் கொண்டது
அழகிய வனமது,
புதிரூற்றி வளர்க்கப்பட்டது,
புரியாவிட்டால் பிழையில்லை
புரிந்துவிட்டால் - உன்
நிலை நிலையில்லை - இது
அகரனின் காடு
எல்லையில்லா நாடு!

குறிப்பு: அகரன் - என் மகன், முதல்வன்.