Wednesday, March 13, 2019

கனவும் நினைவும்

தமையனவன் தனித்திருந்த
தடையங்கள் தெரிந்தவுடன்,
வனங்களதன் சங்கமத்தில்
புவிநீரைத் தினம் பருகி,
அனுதினமும் வளர்ந்துவந்த
வெண்மேகக் கூட்டமொன்று - இரு
மனங்களதன் சங்கமத்தில்,
உயிர் நீரைத்தானுறிஞ்சிப்
புடைத்திட்ட வயிற்றினுள்ளே
நிலைகொண்டது கருவாக!
இரண்டாம் முறை தந்தையென்றக்
கிரீடத்தைச் சூடிக்கொண்டு,
மாலையிட்ட மனையாளின்
வலக்கர விரல் கோர்த்திருந்தேன்,
நிலை கொள்ளாக் கர்வமதில்
மறுகர விரல் சொடுக்கியதில்
இடிகளும்தான் சிதறியதே.
இடி சிதறிய ஓசையது
இசையாகி அடங்கும் முன்னே,
வெண்மேகம் பொழிந்திட்ட
மழைபோலப் பிறந்தவனை
என் அப்பன் குமரேசன்
பூப்போல ஏந்தினானே!
என்கின்ற இக்கனவு 
நினைவாகக் கூடாதா?

பலர் மனதிலவன் வாழ்ந்திருந்தத்
தடையங்கள் தெரிந்தவுடன்,
கடுங்குனங்களதன் சங்கமத்தில்
நச்சதனைத் தினம் பருகி,
அனுதினமும் வளர்ந்துவந்தக்
கருமேகக் கூட்டமொன்று - பல
மனங்கள் மகிழ்ந்திருந்த - என்
மனையதனைச் சூழ்ந்துகொண்டு
என்னப்பனுயிர்ப் பறித்திடவே
நிலைகொண்டது புற்றாக!
வேதனையின் இமயத்தில்
கிரீடத்தைச் சூடிக்கொண்டு,
பெற்றெடுத்தத் தந்தையவன்
வலக்கர விரல் கோர்த்திருந்தேன்,
நிலை கொள்ளாக் கருமமது - அவன்
உயிரறுக்கத் தொடங்கியதில்
இடிகளும்தான் இறங்கியதே,
இடியிறங்கிய மனமதுவும்
இயல்புக்குத் திரும்பும் முன்,
கருமேகம் பொழிந்திட்ட
அமிலத்தின் மழையதுவோ
எங்களுயிர்த்  துளைத்ததுவே,
பொழிந்திட்ட அமிலத்தின்
அசுரவலி உரைக்காமல்
என் அப்பன் குமரேசன்
நிரந்தரமாய் உறங்கினானே!
என்கின்ற இந்நினைவு 
கனவாகிப் போகாதா?

குறிப்பு: என் தந்தை இயற்கை எய்தி ஒரு வருடம் கழிந்தது.

Sunday, March 10, 2019

இரங்கல்

குறிப்பு: அரசியலாலும், போர்களாலும், தீவிரவாதிகளாலும் உயிரிழந்த அனைத்து இந்திய ராணுவ வீரர்களுக்குச் சமர்ப்பணம். 

இல்லம் விட்டு அவன்
உடல் நகரும் - இதயமோ
சொந்தங்களையே சுற்றிவரும்,
கண்ணிமைக்குள் வைத்திருப்பான்
கருத்தரித்த மனையாளை,
உருகித்தான் போயிருப்பான்
மழலை முகம் பாராமல்,
முத்தங்கள் கொடுத்திடுவான்
கருவுக்கு நோவாமல் - ஆனால்
எதிரியவன் எல்லை தொட்டால்
கருவறுத்துக் கொக்கரிப்பான்!

பார்வைதனைக் கூராக்கிப்
பாலைதனை வீடாக்கிப்
பார்மக்கள் பயந்தோடும்
பாம்புகளின் நடுவிலவன்
பாம்பாக ஊர்ந்து கொண்டு - எதிரியின்
பாசறையில் வீழ்வோமோ ?
பாசக்கயிற்றில் மாய்வோமோவெனப்
பாராமல் துச்சமெனத் தன்னுயிரைத்
தூர வீசிய வீரனுக்கா
உன் இரங்கல்?

வரலாறு பேசிக்கொண்டு
வறுமையிலே வாடிடுவாய்,
அதற்குக் காரணமானவனைக்
காலில் விழுந்து வணங்கிடுவாய்!
சுய ஒழுக்கம் பற்றியொருப்
பெருஞ்சரிதம் எழுதிடுவாய்,
யாரும் காணாத பொழுதினிலே
ஒழுங்கீனம் பழகிடுவாய்!
ஊழல் பழகிவிட்டு
ஊரைப் பழித்திடுவாய்,
சுயலாபம் முன்னிட்டு
சுயத்தை இழந்திடுவாய்!
வரைமுறைகள் மீறிவிட்டு
வியாக்கியானம் பேசிடுவாய்,
வாக்கை விற்றுவிட்டு - உன்
வாழ்க்கையைத் தொலைத்திடுவாய்!
விவசாயம் வாழ்கவென்று
வீரமுழக்கம் செய்திடுவாய்,
காட்டை அழித்தவனைக்
கரம் கூப்பி வணங்கிடுவாய்!
தட்டிக் கேட்காமல்
தரங்கெட்டுப் பிழைத்திடுவாய்,
தன் காரியம் சாதிக்கத்
தாயையும் விற்றிடுவாய்!
தவறென்று தெரிந்திருந்தும்
தர்க்கங்கள் செய்திடுவாய்,
அகத்திலிருக்கும் அழுக்குடனே
வாழத்தான் பழகிடுவாய்!
அருகதை உள்ளவனா நீ
இரங்கல் தெரிவிக்க?

ஓட்டுக்குப் பணமளித்தால் - அவனை
வீதியிலே வீசியெறி,
அரசியல் சாக்கடையை
ஓட்டளித்துச் சுத்தம் செய்!
வாரி வழங்க வேண்டாம்,
வரியை ஒழுங்காய்க் கட்டு.
தவறுக்குப் பழகாதே, தட்டிக்கேள்,
கேட்டால்தான் கிடைக்கும்!
நியாயத்தை உரக்கச் சொல்,
உன்னை நிந்திப்பர்
கள்வர் அவர், கருவிக்கிடக்கட்டும்!
காமம் கொள்ளலாம் - ஆனால்
கட்டுப்பாடு அவசியம்!
வலியவன் அடித்தால்
அகிம்சையால் திருப்பி அடி,
எளியவனுக்கோ கருணையைக்
காட்டிவிடு!
நேரமும் முக்கியம்,
நேர்மையும் முக்கியம்!
சாதிகளை விட்டொழி
சக மனிதனைக் கொண்டாடு!
பிறந்த நாட்டுக்குன் பங்களி!
உதவ வேண்டாம்,
உபத்திரவமும் வேண்டாம்!
மெத்தப் படி, கற்றுக்கொள், கற்பி!
முயற்சியே முக்கியம், வெற்றியல்ல!
வரலாற்றை உள்ளபடியே சொல்!
தனித்துவத்திற்கும் சுயநலத்திற்கும்
வேறுபாடு அறி!
இரட்டைத்தனம் விடு
இயற்கையைப் போற்று,
இந்நாட்டை உன் பிள்ளைகள் வாழ
ஏற்ற இடமாய் மாற்று - அதற்கு
முயற்சியாவது செய்!
உன்னுயிரை எல்லை வீரன்
காப்பதற்கு அருகதையாக்கிக்கொள்!

வெறும் இரங்கலொன்றைத் தெரிவித்து - நீ
இரங்கலுக்கு ஆளாகாதே!