Sunday, December 29, 2019

தேர்தல்

சந்தர்ப்பவாதத்தின் உச்சம்,
சகுனித்தனத்தின் எச்சம்,
விடியலின் கல்லறை - உன்
விந்தின் முடிவுரை,
கரைகட்டியத் திருவோடுகள்
கலைகட்டியுன் வாழ்வதனை
வேட்டையாடும் விளையாட்டு,
தேர்தல்!

Tuesday, October 1, 2019

அகரன் காடு

அழகிய காடுதான் அது
விசித்திரக் குணங்கள் கொண்டது,
நிறங்களும் அவ்வாறே,
புதிரூற்றி வளர்க்கப்பட்டது,
புரியாத புதிரது  - ஆனாலும்
அழகிய காடுதான் அது
அரசன் அவனென்பதால்!

இங்கு
மரங்களில் மண்வாசம் வீசும்
மீன்கள் விளையும் - உலுக்கினால்
கேள்விகள் உதிரும் - விதைத்தவுடன்
கனி கிடைக்கும்,
செடிகள் முட்டையிடும் ,
முட்கள் கதை சொல்லும்,
மூன்று கால்களுடன்
முயலே வேட்டையாடும்!

தவறுகள் தெரிந்தே செய்யப்படும்,
திருத்தங்களுக்கு நேரமில்லை,
தூங்கி எழுந்தாலே
அழுக்குகள் நீங்கும் - தூவானம்
தூய அன்பைக் கொட்டும்,
தூரத்து இடி முழக்கம்
துள்ளிக் கழுத்தைக் கட்டும்!

மீன்களெல்லாம்  - அவன்
இலட்சினையைக் கொண்டிருக்கும்,
கரடிகள் கதை சொல்லும்
கட்டியும் உருளும்.
மேகங்களைத் தின்னலாம்,
மூக்கின் பொருத்தம் பார்த்தே
திருமணங்கள் நடைபெறும்,
வாந்தி வயிற்றுக்குள்ளும்
எடுக்கப்படும்,
சிரிப்புகள் சினமாகும்
சினம் நகைப்பூட்டும்,
புலி புல் மேயும்
புற்கள் புலவு உண்ணும்,
பறக்கப் பழகலாம் - ஆனால்
புசிப்பது பாவச்செயல்!

இக்காட்டில்
கூகுளுக்கும் பசி எடுக்கும் - அது
செய்தியைத்தான் தின்னும்,
ரசம் கடலாகும்
கடல் கடுகாகும்,
அம்மனங்கள் அசிங்கமில்லை
ஆடையே அவமானம்,
ஆருடங்கள் பலிப்பதில்லை
ஆசைகள் மட்டுமே,
அறிமுகங்கள் வெட்கத்தில் முடியும்,
நடிகர்கள் இல்லாமலே
நாடகங்கள் அரங்கேறும்,
அரங்கங்கள் இல்லாமலே
அம்புலிமாமா கதை சொல்லும்!

சாதிகள் இல்லை
சாத்திரங்கள் இல்லை
கடவுளும் இல்லை
கடமையும் இல்லை - ஆனால்
சாதனைகளனைத்தும் சாத்தியமே,
பெண்ணென்று யாருமில்லை
ஆணென்றும் எவருமில்லை
அன்பே அடிப்படைத் தகுதி,
அறம் என்பது
அறியப்பட வேண்டிய ஒன்று!

விசித்திரக் குணங்கள் கொண்டது
அழகிய வனமது,
புதிரூற்றி வளர்க்கப்பட்டது,
புரியாவிட்டால் பிழையில்லை
புரிந்துவிட்டால் - உன்
நிலை நிலையில்லை - இது
அகரனின் காடு
எல்லையில்லா நாடு!

குறிப்பு: அகரன் - என் மகன், முதல்வன்.

Monday, September 2, 2019

தொப்பை சாமி

"உ"
இதோ உன் சுழியைச்
சுழித்துவிட்டேன்,
வெற்றியின் குறுக்கே வரும்
தடைகளைக் கலையாதே,
என் வாழ்க்கைப் பயணத்தை
எளிதாக்காதே - என்
முயற்சிகள் அனைத்தையும்
வெற்றியாக்காதே,
என் விதியை
என்னிடமே விட்டுவிடு
மதி கொண்டதனிடம்
மோதிக்கொள்கிறேன்!

உன்னிடம் வேண்டுவதெல்லாம்...
உன் பானை வயிற்றை
என்னிரு கைகள் கோர்த்து
அணைக்க வேண்டும்,
உன் தொப்பையைக் குறைக்காமல்
அதற்கொரு வழியைச் சொல்!

உன் தும்பிக்கையில் என்
தலைதொட்டுப் பின் திருநீறிட்டு
உன் தோளில் அமர்த்திக்கொள்,
அனுமதி தேவையில்லை - என்
அம்மையப்பனைச் சுற்றி வா,
அப்படியே உன் ஞானத்தில்
பங்கொன்றைத் தந்துவிடு,
என்னுடைய ஞானத்தை
என்னிடமே விட்டுவிடு!

உன் உடைந்தக் கொம்பை
ஒட்டித் தருகிறேன்,
உன் இன்னொரு கொம்பை
எனக்குப் பரிசளித்துவிடு,
மூன்றாவது இதிகாசம்
எழுதவேண்டும்!

நீ பிறந்த நாளில் - என்னை
உன்  மடிமீது அமர்த்திக்கொள்,
என் பசியடங்கிய பின்தான்
உனக்குக் கொழுக்கட்டை,
நீ கரையும் நீரையெல்லாம்
தீர்த்தங்கள் ஆக்கிவிடு - உண்ட
கொழுக்கட்டைச் செரிக்க
அத்தீர்த்தத்தைப் பருகிக்கொள்கிறேன்!

மூஞ்சூறும் நீயும் நானும்
பிரபஞ்சங்களில் ஒளிந்து
கண்ணாமூச்சியாடுவோம் - பின்
சில கோள்களை வீசியெறிந்து - அதன்
திசை மாற்றுவோம்,
பூமியைச் சுற்றி
நிலவுகளைக் கட்டி வைப்போம்,
நம் உடலினில்
விண்மீன்களை ஒட்டி வைப்போம்,
விளையாடிக் களைத்தபின்
கட்டிக்கொண்டு உறங்குவோம் - உன்
பெருங்காதை என் தலையணையாக்கு,
தேவ ரகசியங்கள்
எனைத் தாண்டியுன்
செவி சேரட்டும்!

நீயெனக்குச் சிவனளித்த வரம்
என்னுடனே நீயிருந்தால் பலம்,
வா, நம் நட்பைப்
படம்  பிடிப்போம் - பின்
என் மோதிரத்தில் அமர்ந்துகொள்,
தெய்வம் என்னுடன்
நேரடித் தொடர்பிலிருப்பதை
அனைவரும் அறியட்டும்!

நம் நட்பைக் கண்டவர்
பொறாமை கொள்வர்,
உனை மறந்து புதுச்
சட்டங்கள் இயற்றுவர் - உன்
பெயரால் உயிர் பறிப்பர்
தவறாமல் தலை எடுப்பர் - அட
வினைத் தீர்ப்பவன்
நீயிருக்கப் பயமென்ன,
நான் தலையிழந்தால் - உன்
தலை தந்து
என்னுயிர்க் காப்பாய்
எனும் நம்பிக்கையில்
உரக்கச் சொல்கிறேன்
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா"!

Wednesday, June 12, 2019

வணங்காமுடி

அன்பால் அழுத்தியும்
அடங்கவில்லை,
தன்மையாத் தடவியும்
தணியவில்லை,
நல்லெண்ணத்துடன் துளி
எண்ணெய் வார்த்துருவியும்
பயனில்லை - வெகு
சிரத்தையுடன் சிறு
கயிறு கட்டியும்
கட்டுக்குளில்லை - பாசத்துடன்
பசை தடவியும்
பலனில்லை - பாழும்
பாசாங்கும் பலிக்கவில்லை,
உபதேசம் உரைக்கவில்லை,
அகந்தை அழியவில்லை,
அகங்காரத்திற்களவில்லை  - பின்னொருநாள்
அறம் கொண்டக் கத்தரியது
வெகுண்டெழுந்து வெட்டியதில்
வழியின்றி வீழ்ந்தது - அந்தச்
சுருட்டைக் குணம் கொண்ட
வணங்காமுடி!

குறிப்பு: இது என் சுருட்டை முடி அனுபவங்கள், சில மனிதர்களுக்கும் பொருந்தும். 

Friday, May 31, 2019

அதிசயம்

வெண்மையதன் ஆதிக்கத்தால்
மறு நிறங்கள் மறந்தேனோ?
நிறங்களதை மறந்துவிட்டுப்
பார்வைதனை இழந்தேனோ?

பார்வைதனை இழந்ததனால்
காதலென்று உணர்ந்தேனோ?
காதலினால் ஆனதனால்
வியப்பினிலே விழித்தேனோ?

வியப்பினிலே விழித்ததனால்
கண்கொள்ளாமல் கண்டேனோ?
கொள்ளாமல் கண்டபின்பு
மெய்யதனை மறந்தேனோ?

மெய்யதனை மறந்ததனால்
இதயம் மட்டும் கொண்டேனோ?
ஓரிதயம் மட்டும் கொண்டுத்
திக்கின்றித் திரிந்தேனோ?

திக்கின்றித் திரிந்ததனால்
பளிங்குகளைத் தொட்டேனோ?
பளிங்கதனைத் தொட்டவுடன்
உறைந்துடைந்து போனேனோ?

உறைந்துடைந்து போனதனால்
காதல் ஆழம் உணர்ந்தேனோ?
ஆழத்தை உணர்ந்துவிட்டு
யமுனையிலே மாய்வேனோ?

யமுனையினிலே மாய்ந்ததினால்
விண்ணுலகம் செல்வேனோ?
விண்ணுலகம் சென்றவுடன்
ஷாஜகானைக் காண்பேனோ?

ஷாஜகானைக் கண்டதனால்
மறு பிறவி எடுப்பேனோ?
மறுபிறவி எடுத்தவுடன் - என்
காதலியைக் காண்பேனோ?

காதலியைக் கண்டதனால்
காதலித்துத் திளைப்பேனோ?
ஷாஜகான் போல் காதலித்து
வரலாற்றில் நிலைப்பேனோ?

வரலாற்றில் நிலைத்தனால்
சுவர்க்கத்தை அடைவேனோ?
சுவர்க்கத்தைத்  தவிர்த்துவிட்டுத்
தாஜ்மகாலில் நிலைப்பேனோ?

அற்பச் சுவர்க்கத்தைத்
தவிர்த்துவிட்டு - அழகுத்
தாஜ்மகாலில் நிலைப்பேனோ!

Friday, May 3, 2019

கறிவேப்பிலைக்காரி

சிறுவயது முதலே
அவளை அறிவேன்,
அனுபவத்தைத் தலையிலும்
அகவையை உருவிலும்
கொண்டிருப்பாள்,
ரவிக்கை அணிவதில்லை
வெண்ணிறச் சீலை மட்டுமே,
பக்கத்து வீட்டுக்காரி!

என்னுடைய வரவறிந்தால்
உச்சி வெயிலானாலும்,
பாதங்கள் பொசுங்கினாலும்,
நடுங்கிய நடையதுவும்
தடம் தப்பிப் போனாலும்,
ஓடோடி வந்திடுவாள்!

அவளின் முகம் பார்த்தவுடன்
கவலைகள் கலைந்தோடும்,
நடுங்குமவள் கை தொட்டு
எண்ணங்கள் உறுதி பெரும்,
தூயவளின் ஆசீர்வாதம்
தீய வினைகள் தீர்த்துவிடும்,
பசிநேரம் வந்துவிட்டால்
அவள் குழைத்து வடித்தச்
சோற்றுப் பருக்கைப்
பாசத்தால் பருத்திருக்கும் - இதோ
நானாகிய நாத்திகனும்
அவளாகிய நாராயணனும்
சந்தித்த தருணம்!

வியாழன் தோறும்
புளியம்பட்டிச் சந்தை - அவள்
கறிவேப்பிலையை நுகர்ந்திடவே
கால்கடுக்கக் காத்திருக்கும்.
அன்றவள்
"கறிவேப்பிலை வாங்கலியோ?"
என்றவள் கூவுவதை
ஊரில் கேட்காத ஆளில்லை,
இன்றவள்
கறிவேப்பிலைத் தேகம்
கதறுவதை - அவள்
சிறுநீர் கூடக் கேட்பதில்லை!

நன்செய் நிலமில்லை
தண்டட்டித் தோடில்லை,
ஒற்றைச் சேலையும்
ஒழுகும் வீடும்
ஒண்டிக் குடித்தனமும்தான் - ஆனாலும்
அவளைப்போல் மகிழ்ந்திருந்தவள்
ஊரிலுமில்லை, பாரிலுமில்லை!

காமாலை முற்றி வந்த
மூன்று  வருடக்
குழந்தை என்னை
ஆடு தொடாச் செடியரைத்து
ஆபத்தின்றிக் காத்தாயே,
உன்னுயிர் இன்றுத் தவிக்கையிலேக்
கடவுளாகத் துடிக்கின்றேன்,
அவ்வாறொன்று இல்லையென - சத்தியம்
சம்மட்டியில் அடிக்கிறதே!

ஈயெறும்பு அண்டாமல்
ஈனப்பிறவி ஆகாமல்
இன்றுவரை எனைக்காக்கும் - என்
அப்பத்தா அமத்தா மட்டுமல்ல,
கருவாக எனைத்தாங்கிக்
கலியுகத்தில் சேர்த்திட்ட
என் அன்னை மட்டுமல்ல,
மருத்துவர்கள் கைவிட்டும்
மூலிகைகள் கண்டெடுத்து
என்னுயிரைக் காத்திட்டப்
பாங்கிழவி...
நீயும் என் தாயே!

குறிப்பு: என்னுயிர்க் காத்திட்டப் பக்கத்து வீட்டுப் பாட்டி இன்று மரணப்படுக்கையில்.

Wednesday, April 17, 2019

ஓட்டு

கலைமகளின் வீணை
வீணையின் இசை
இசை தந்த மயக்கம்
மயக்கம் தரும் நட்பு
நட்பு செய்த துரோகம்
துரோகம் கண்ட மனம்
மனம் மதிக்கும் கடவுள்
கடவுளின் துகள்
துகள் உருவில் விதை
விதையின் விருட்சம்
விருட்சத்தின் விதி
விதி வென்ற மதி
மதி மயக்கும் விழி
விழி பறிக்கும் மின்னல்
மின்னலைத் தந்த இடி
இடி தாங்கிய மரம்
மரம் கொண்ட வேர்
வேர் பிடித்த மண்
மண் கொண்ட மணம்
மணம் எழுதும் கதை
கதை சொல்லும் நெறி
நெறி தவறாத் தலை
தலை வணங்கா வீரம்
வீரம் எனும் கலை
(கலைமகளின் வீணை...)

இவ்வனைத்தையும் விட
வலிமையானது - உன்
ஒற்றை ஓட்டு!

Tuesday, April 2, 2019

கள்

குளிர் போதை,
குருத்துக் கவிதை,
பனைமகள்,
புளிப்புச் சாறு,
வெள்ளை மேனி,
கொள்ளை மணம்,
உன்னத உணவு,
உச்சக் கனவு,
கள்!

Wednesday, March 13, 2019

கனவும் நினைவும்

தமையனவன் தனித்திருந்த
தடையங்கள் தெரிந்தவுடன்,
வனங்களதன் சங்கமத்தில்
புவிநீரைத் தினம் பருகி,
அனுதினமும் வளர்ந்துவந்த
வெண்மேகக் கூட்டமொன்று - இரு
மனங்களதன் சங்கமத்தில்,
உயிர் நீரைத்தானுறிஞ்சிப்
புடைத்திட்ட வயிற்றினுள்ளே
நிலைகொண்டது கருவாக!
இரண்டாம் முறை தந்தையென்றக்
கிரீடத்தைச் சூடிக்கொண்டு,
மாலையிட்ட மனையாளின்
வலக்கர விரல் கோர்த்திருந்தேன்,
நிலை கொள்ளாக் கர்வமதில்
மறுகர விரல் சொடுக்கியதில்
இடிகளும்தான் சிதறியதே.
இடி சிதறிய ஓசையது
இசையாகி அடங்கும் முன்னே,
வெண்மேகம் பொழிந்திட்ட
மழைபோலப் பிறந்தவனை
என் அப்பன் குமரேசன்
பூப்போல ஏந்தினானே!
என்கின்ற இக்கனவு 
நினைவாகக் கூடாதா?

பலர் மனதிலவன் வாழ்ந்திருந்தத்
தடையங்கள் தெரிந்தவுடன்,
கடுங்குனங்களதன் சங்கமத்தில்
நச்சதனைத் தினம் பருகி,
அனுதினமும் வளர்ந்துவந்தக்
கருமேகக் கூட்டமொன்று - பல
மனங்கள் மகிழ்ந்திருந்த - என்
மனையதனைச் சூழ்ந்துகொண்டு
என்னப்பனுயிர்ப் பறித்திடவே
நிலைகொண்டது புற்றாக!
வேதனையின் இமயத்தில்
கிரீடத்தைச் சூடிக்கொண்டு,
பெற்றெடுத்தத் தந்தையவன்
வலக்கர விரல் கோர்த்திருந்தேன்,
நிலை கொள்ளாக் கருமமது - அவன்
உயிரறுக்கத் தொடங்கியதில்
இடிகளும்தான் இறங்கியதே,
இடியிறங்கிய மனமதுவும்
இயல்புக்குத் திரும்பும் முன்,
கருமேகம் பொழிந்திட்ட
அமிலத்தின் மழையதுவோ
எங்களுயிர்த்  துளைத்ததுவே,
பொழிந்திட்ட அமிலத்தின்
அசுரவலி உரைக்காமல்
என் அப்பன் குமரேசன்
நிரந்தரமாய் உறங்கினானே!
என்கின்ற இந்நினைவு 
கனவாகிப் போகாதா?

குறிப்பு: என் தந்தை இயற்கை எய்தி ஒரு வருடம் கழிந்தது.

Sunday, March 10, 2019

இரங்கல்

குறிப்பு: அரசியலாலும், போர்களாலும், தீவிரவாதிகளாலும் உயிரிழந்த அனைத்து இந்திய ராணுவ வீரர்களுக்குச் சமர்ப்பணம். 

இல்லம் விட்டு அவன்
உடல் நகரும் - இதயமோ
சொந்தங்களையே சுற்றிவரும்,
கண்ணிமைக்குள் வைத்திருப்பான்
கருத்தரித்த மனையாளை,
உருகித்தான் போயிருப்பான்
மழலை முகம் பாராமல்,
முத்தங்கள் கொடுத்திடுவான்
கருவுக்கு நோவாமல் - ஆனால்
எதிரியவன் எல்லை தொட்டால்
கருவறுத்துக் கொக்கரிப்பான்!

பார்வைதனைக் கூராக்கிப்
பாலைதனை வீடாக்கிப்
பார்மக்கள் பயந்தோடும்
பாம்புகளின் நடுவிலவன்
பாம்பாக ஊர்ந்து கொண்டு - எதிரியின்
பாசறையில் வீழ்வோமோ ?
பாசக்கயிற்றில் மாய்வோமோவெனப்
பாராமல் துச்சமெனத் தன்னுயிரைத்
தூர வீசிய வீரனுக்கா
உன் இரங்கல்?

வரலாறு பேசிக்கொண்டு
வறுமையிலே வாடிடுவாய்,
அதற்குக் காரணமானவனைக்
காலில் விழுந்து வணங்கிடுவாய்!
சுய ஒழுக்கம் பற்றியொருப்
பெருஞ்சரிதம் எழுதிடுவாய்,
யாரும் காணாத பொழுதினிலே
ஒழுங்கீனம் பழகிடுவாய்!
ஊழல் பழகிவிட்டு
ஊரைப் பழித்திடுவாய்,
சுயலாபம் முன்னிட்டு
சுயத்தை இழந்திடுவாய்!
வரைமுறைகள் மீறிவிட்டு
வியாக்கியானம் பேசிடுவாய்,
வாக்கை விற்றுவிட்டு - உன்
வாழ்க்கையைத் தொலைத்திடுவாய்!
விவசாயம் வாழ்கவென்று
வீரமுழக்கம் செய்திடுவாய்,
காட்டை அழித்தவனைக்
கரம் கூப்பி வணங்கிடுவாய்!
தட்டிக் கேட்காமல்
தரங்கெட்டுப் பிழைத்திடுவாய்,
தன் காரியம் சாதிக்கத்
தாயையும் விற்றிடுவாய்!
தவறென்று தெரிந்திருந்தும்
தர்க்கங்கள் செய்திடுவாய்,
அகத்திலிருக்கும் அழுக்குடனே
வாழத்தான் பழகிடுவாய்!
அருகதை உள்ளவனா நீ
இரங்கல் தெரிவிக்க?

ஓட்டுக்குப் பணமளித்தால் - அவனை
வீதியிலே வீசியெறி,
அரசியல் சாக்கடையை
ஓட்டளித்துச் சுத்தம் செய்!
வாரி வழங்க வேண்டாம்,
வரியை ஒழுங்காய்க் கட்டு.
தவறுக்குப் பழகாதே, தட்டிக்கேள்,
கேட்டால்தான் கிடைக்கும்!
நியாயத்தை உரக்கச் சொல்,
உன்னை நிந்திப்பர்
கள்வர் அவர், கருவிக்கிடக்கட்டும்!
காமம் கொள்ளலாம் - ஆனால்
கட்டுப்பாடு அவசியம்!
வலியவன் அடித்தால்
அகிம்சையால் திருப்பி அடி,
எளியவனுக்கோ கருணையைக்
காட்டிவிடு!
நேரமும் முக்கியம்,
நேர்மையும் முக்கியம்!
சாதிகளை விட்டொழி
சக மனிதனைக் கொண்டாடு!
பிறந்த நாட்டுக்குன் பங்களி!
உதவ வேண்டாம்,
உபத்திரவமும் வேண்டாம்!
மெத்தப் படி, கற்றுக்கொள், கற்பி!
முயற்சியே முக்கியம், வெற்றியல்ல!
வரலாற்றை உள்ளபடியே சொல்!
தனித்துவத்திற்கும் சுயநலத்திற்கும்
வேறுபாடு அறி!
இரட்டைத்தனம் விடு
இயற்கையைப் போற்று,
இந்நாட்டை உன் பிள்ளைகள் வாழ
ஏற்ற இடமாய் மாற்று - அதற்கு
முயற்சியாவது செய்!
உன்னுயிரை எல்லை வீரன்
காப்பதற்கு அருகதையாக்கிக்கொள்!

வெறும் இரங்கலொன்றைத் தெரிவித்து - நீ
இரங்கலுக்கு ஆளாகாதே!