Tuesday, May 3, 2016

வெத்து வேட்டு

எச்சிலுடன்  சந்தர்ப்பவாதம் கூட்டிட்டு,
தன்மானத்தைப் பதவியிடம் தாரையிட்டு,
மக்களை வீழ்த்தும் மக்களாட்சி நாட்ட முற்பட்டு,
உனைக் கட்டாயச் சாட்சியாக்கி விரலில் மையிட்டு,
விடியலே இல்லையடா உனக்கென எக்காளமிட்டு,
இதோ வந்தே விட்டது அரசியல் கூட்டை விட்டு,
தேர்தலெனும் ஜனநாயகக் கொலைக்கட்டு,
இது சட்டப்பூர்வமாய் உனை ஆக்கியே தீரும்...
வெத்து வேட்டு!

அம்மா ஓட்டு அய்யா ஓட்டு,
சாமி ஓட்டு கண்ணா ஓட்டு,
ஐந்து வருடமொருமுறைக் கனியமுதைக் கொட்டிவிட்டு,
வெடி வெடித்து ஆட்டம் கட்டி விட்டு,
கனிந்துருகி வேட்பாளர் யாசிப்பாரே ஓட்டு,
மறந்து அவர் திருவோட்டில் இட்டுவிட்டு,
திரும்பும் முன் ஆவாய் நீ...
வெத்து வேட்டு!

சர சரமாய் தினம் வெடிக்கும் பிரச்சார வேட்டு,
குர குரங்குடன் கூசாமல் வைத்துக் கூட்டு,
கழு கழுதையும் கோருமே ஓட்டு,
தேர் தேர்ந்தபின் கூட்டணியில் வெடித்தால் வேட்டு,
ஹா ஹா குரங்கனுக்காக நீ கழுதைக்கிட்ட ஓட்டு,
அடடா! ஆகிப்போனதே...
வெத்து வேட்டு!

சரி சரி கூட்டணிக்கில்லை என் ஓட்டு,
தனித் தனியாய் நிற்பவனிடமே வைப்பேன் கூட்டு,
அப்படி அப்படி உன்னுள் பெருமைத்தீ எரிகையிலே சுட்டு,
உன்  உந்தன் ஓட்டினால் அவன் வென்றுவிட்டு,
நின்  நிந்தன் துரோகியுடன் வைத்துக் கூட்டு,
மறு மறுகணமே உனை எரிப்பான் அதே தீயிலிட்டு,
வலிமை ஆயுதம் தானே என் ஓட்டு?
என நீ விழித்தால் சூடு பட்டு,
அடடா! அதுவும் ஆகிப்போனதே...
வெத்து வேட்டு!

ராமனோ ராவணனோ எவராண்டாலும் திருட்டு,
என்னடையாளமும் நஞ்சை புஞ்சை நீரும் சுரண்டிவிட்டு,
வெறியாட்டம் ஆடும் இத்திருடர்களுடன் மாறுபட்டு,
யாருமில்லையப்பா என் விருப்பதிற்குட்பட்டு,
என்றெண்ணி நீ நோட்டாவைத் தொட்டுவிட்டு,
பெருமையுடன் முடிக்கையில் அதை நீ முகநூலில் பதிவிட்டு,
உன் விரல் மை மறைந்தோடும் உன்னிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு,
உன் வரவைப் பதிவு செய்தேன் அவ்வளவே அட அடிமட்டு,
பெரும்பான்மையை சிறுபான்மை ஆள விட்டுவிட்டு,
இப்பொழுதும் ஆகிப்போனாயே...
வெத்து வேட்டு!

வித வித மெட்டில் பாட்டுக்கள் பல பாடிவிட்டு,
தவறாது அளியுங்கள் இத்தேர்தலில் ஓட்டு,
என்று கூவினீர்களே மக்களைக் கூப்பிட்டு,
இப்படித் தவறான வாக்குறுதிகள் அளித்துவிட்டு,
தேர்ந்தபின் உடைக்கவே கூட்டணி வைத்துவிட்டு,
மதிப்பில்லா எங்கள் ஓட்டைத் திருடிவிட்டு,
வஞ்சித்து விட்டார்களே எங்களைச் சிதையிலிட்டு,
தேர்தல் ஆணையமே நீயுமா இக்கொலைக்குக் கூட்டு?
என்று புலம்பித் திரும்பினால் உன் கை வாய்க்கு விழும் பூட்டு,
அன்றுணர்வாய்.. அட, நீ வெறும்...
வெத்து வேட்டு!

உன் வாக்கடைய அவனுரைத்த  பொய் வாக்கை நம்பிவிட்டு,
இலவசத்தின் துதியை உரக்கப் பாடிவிட்டு,
தன்னினமும் நிலமும் அழியத் துணை போய்விட்டு,
விசரன் போல் உன் தலைவரை உடலில் பச்சையிட்டு,
மலிவு விலையில் உன் ஓட்டை வன்புணர்ந்துவிட்டு,
சுரணை இழந்து மானம் கெட்டு,
நீ ஓட்டிட்ட கட்சி கஜானாவைக் காலி செய்துவிட்டு,
ஓடுவதை வெறுமனே பார்த்திருந்தால்... ஐயமேயில்லை நீயொரு...
வெத்து வேட்டு!

அநீதியைத் தட்டாமல் விட்டுவிட்டு,
அடிமைத்தனமே நடைமுறையென வாதிட்டு,
ஆட்டு மந்தை வாழ்க்கைக்குப் பழகிவிட்டு,
ஜெயிக்கும் கட்சிக்கே ஓட்டென்று விசர மார் தட்டிவிட்டு,
பரம்பரை வியாதியாய் சின்னங்களுக்கே ஓட்டிட்டு,
திருடருக்கே மாற்றி மாற்றியுன் வாக்கை வார்த்துவிட்டு,
தக்கனப்பிழைத்து விட்டேன் என்றுன்னையே ஏமாற்றிவிட்டு,
வீழ்வதற்கே இந்நாட்டை விட்டுவிட்டு,
கடமை தவறிச் சென்று விட்டால் நீ இவ்வுலகு விட்டு,
சாகும்முன் உன் சந்ததி சத்தியமாய் செதுக்குமுன் கல்லறையில்...
"நீயொரு... வெத்து வேட்டு!"