Tuesday, May 3, 2016

வெத்து வேட்டு

எச்சிலுடன்  சந்தர்ப்பவாதம் கூட்டிட்டு,
தன்மானத்தைப் பதவியிடம் தாரையிட்டு,
மக்களை வீழ்த்தும் மக்களாட்சி நாட்ட முற்பட்டு,
உனைக் கட்டாயச் சாட்சியாக்கி விரலில் மையிட்டு,
விடியலே இல்லையடா உனக்கென எக்காளமிட்டு,
இதோ வந்தே விட்டது அரசியல் கூட்டை விட்டு,
தேர்தலெனும் ஜனநாயகக் கொலைக்கட்டு,
இது சட்டப்பூர்வமாய் உனை ஆக்கியே தீரும்...
வெத்து வேட்டு!

அம்மா ஓட்டு அய்யா ஓட்டு,
சாமி ஓட்டு கண்ணா ஓட்டு,
ஐந்து வருடமொருமுறைக் கனியமுதைக் கொட்டிவிட்டு,
வெடி வெடித்து ஆட்டம் கட்டி விட்டு,
கனிந்துருகி வேட்பாளர் யாசிப்பாரே ஓட்டு,
மறந்து அவர் திருவோட்டில் இட்டுவிட்டு,
திரும்பும் முன் ஆவாய் நீ...
வெத்து வேட்டு!

சர சரமாய் தினம் வெடிக்கும் பிரச்சார வேட்டு,
குர குரங்குடன் கூசாமல் வைத்துக் கூட்டு,
கழு கழுதையும் கோருமே ஓட்டு,
தேர் தேர்ந்தபின் கூட்டணியில் வெடித்தால் வேட்டு,
ஹா ஹா குரங்கனுக்காக நீ கழுதைக்கிட்ட ஓட்டு,
அடடா! ஆகிப்போனதே...
வெத்து வேட்டு!

சரி சரி கூட்டணிக்கில்லை என் ஓட்டு,
தனித் தனியாய் நிற்பவனிடமே வைப்பேன் கூட்டு,
அப்படி அப்படி உன்னுள் பெருமைத்தீ எரிகையிலே சுட்டு,
உன்  உந்தன் ஓட்டினால் அவன் வென்றுவிட்டு,
நின்  நிந்தன் துரோகியுடன் வைத்துக் கூட்டு,
மறு மறுகணமே உனை எரிப்பான் அதே தீயிலிட்டு,
வலிமை ஆயுதம் தானே என் ஓட்டு?
என நீ விழித்தால் சூடு பட்டு,
அடடா! அதுவும் ஆகிப்போனதே...
வெத்து வேட்டு!

ராமனோ ராவணனோ எவராண்டாலும் திருட்டு,
என்னடையாளமும் நஞ்சை புஞ்சை நீரும் சுரண்டிவிட்டு,
வெறியாட்டம் ஆடும் இத்திருடர்களுடன் மாறுபட்டு,
யாருமில்லையப்பா என் விருப்பதிற்குட்பட்டு,
என்றெண்ணி நீ நோட்டாவைத் தொட்டுவிட்டு,
பெருமையுடன் முடிக்கையில் அதை நீ முகநூலில் பதிவிட்டு,
உன் விரல் மை மறைந்தோடும் உன்னிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு,
உன் வரவைப் பதிவு செய்தேன் அவ்வளவே அட அடிமட்டு,
பெரும்பான்மையை சிறுபான்மை ஆள விட்டுவிட்டு,
இப்பொழுதும் ஆகிப்போனாயே...
வெத்து வேட்டு!

வித வித மெட்டில் பாட்டுக்கள் பல பாடிவிட்டு,
தவறாது அளியுங்கள் இத்தேர்தலில் ஓட்டு,
என்று கூவினீர்களே மக்களைக் கூப்பிட்டு,
இப்படித் தவறான வாக்குறுதிகள் அளித்துவிட்டு,
தேர்ந்தபின் உடைக்கவே கூட்டணி வைத்துவிட்டு,
மதிப்பில்லா எங்கள் ஓட்டைத் திருடிவிட்டு,
வஞ்சித்து விட்டார்களே எங்களைச் சிதையிலிட்டு,
தேர்தல் ஆணையமே நீயுமா இக்கொலைக்குக் கூட்டு?
என்று புலம்பித் திரும்பினால் உன் கை வாய்க்கு விழும் பூட்டு,
அன்றுணர்வாய்.. அட, நீ வெறும்...
வெத்து வேட்டு!

உன் வாக்கடைய அவனுரைத்த  பொய் வாக்கை நம்பிவிட்டு,
இலவசத்தின் துதியை உரக்கப் பாடிவிட்டு,
தன்னினமும் நிலமும் அழியத் துணை போய்விட்டு,
விசரன் போல் உன் தலைவரை உடலில் பச்சையிட்டு,
மலிவு விலையில் உன் ஓட்டை வன்புணர்ந்துவிட்டு,
சுரணை இழந்து மானம் கெட்டு,
நீ ஓட்டிட்ட கட்சி கஜானாவைக் காலி செய்துவிட்டு,
ஓடுவதை வெறுமனே பார்த்திருந்தால்... ஐயமேயில்லை நீயொரு...
வெத்து வேட்டு!

அநீதியைத் தட்டாமல் விட்டுவிட்டு,
அடிமைத்தனமே நடைமுறையென வாதிட்டு,
ஆட்டு மந்தை வாழ்க்கைக்குப் பழகிவிட்டு,
ஜெயிக்கும் கட்சிக்கே ஓட்டென்று விசர மார் தட்டிவிட்டு,
பரம்பரை வியாதியாய் சின்னங்களுக்கே ஓட்டிட்டு,
திருடருக்கே மாற்றி மாற்றியுன் வாக்கை வார்த்துவிட்டு,
தக்கனப்பிழைத்து விட்டேன் என்றுன்னையே ஏமாற்றிவிட்டு,
வீழ்வதற்கே இந்நாட்டை விட்டுவிட்டு,
கடமை தவறிச் சென்று விட்டால் நீ இவ்வுலகு விட்டு,
சாகும்முன் உன் சந்ததி சத்தியமாய் செதுக்குமுன் கல்லறையில்...
"நீயொரு... வெத்து வேட்டு!"

Saturday, January 16, 2016

சீறுங்கள் காளைகளே

சீறுங்கள் காளைகளே,
சீவிய கொம்பன்களே!

தாய்த்தமிழ் நாட்டினிலே,
என் வாழ்வுக்குப் பங்கமில்லே,
எல்லையின்றி அத்து மீறும் இரட்டைத்தன ஆர்வலரே,
என்னைப் புசிப்பதை நொடி மறந்தென் - குரல்
கொஞ்சம் கேளுங்களேன்
என்று.. சீறுங்கள்  காளைகளே!

யானை குதிரை கழுதை மேலில்லை அக்கறை,
என்னினத்திற்கு மட்டும் எதற்கிந்தப் பரிந்துரை?
என் சொந்தமவன் குத்தினாலும் கிழித்தாலும் காளையரை,
மறத்தமிழன் எனை மனத்தால் ஆளும் வரை,
அவன் பணி செய்தே கிடப்பேன் -
என்னினம் வீழும் வரை
என்று.. சீறுங்கள் காளைகளே!

வாடிவாசல் வழி திறந்து,
விருட்டென சீறிப்பாய்ந்து,
குளம்படிகள் ஆழமாய் பதிந்து,
மச்சக் காளைகளினுள் கலந்து,
திமில் தழுவும் முகங்கள் மறந்து,
கொம்பில் எவனும் சிக்காமல் வளைந்து,
சிமிட்டும் நேரம் முன்னேறிப்பறந்து,
அயர்வற்ற உணர்வுகள் வானுயர்ந்து,
வளர்த்த குடும்பத்தினுள் போய் அணைந்து,
சொந்த பந்தம் அகமகிழ்ந்து,
கண்டிருக்கும் கண் வியந்து,
ஆடிவருமிந்த ஏறைத் தழுவாமல் - இல்லையடா
பொங்கல் விருந்து,
என்று.. சீறுங்கள் காளைகளே!

கோடி கோடியாய் பணம் இறைந்து,
கொத்தாக எங்களினம் மடிந்து,
அயலினம் என் மரபு நுழைந்து,
என் தமிழுக்குத் துரோகம் புரிந்து,
கனவு காணாதே - உனக்காவேன்
நான் விருந்து,
என்று.. சீறுங்கள் காளைகளே!

வருடந்தோறும் சீராட்டிப் பாராட்டி,
பசும்புல் பருத்தித் துவரைப் புகட்டி,
காலாண்டில் சத்துருண்டை ஊட்டி,
அவன் பசித்து என் பசியாற்றி,
என்னுடல் நலம் பேணப் பதறிப் பிதற்றி,
ஊர் உறவு காணாது ஊண் உறக்கமின்றி,
என் திமில் அணைத்த அவன் வெற்றி,
அவன் முத்தமிட்ட என் நெற்றி,
சொல்லுமடா என்னை - எப்படி
வளர்த்தான் போற்றி,
என்று.. சீறுங்கள் காளைகளே!

அம்மா என்ற சொல்லை அடிமைச்சொல்லாக்கி,
நீ அம்மா என்றழைப்பதையும் அரசியலாக்கி,
கலைஞரும் கடை நிலையை காசாக்கி,
உரிமைகளை உளுத்த கட்டுமரமாக்கி,
கலகத்தையே கழகங்களின் கொள்கையாக்கி,
தேர்தலில் வன்புணர்ந்து நம்மை விலைமாதராக்கி,
பிணம் தின்னும் - அவல அரசியலை
எறியுங்கள் தூக்கி,
என்று.. சீறுங்கள் காளைகளே!

முந்தா நேற்றைய ஆலம்பாடியனும் காங்கேயனும்,
நேற்றைய புலிகுளத்தானும் உம்பளாச்சேரியனும் ,
இன்றைய பருகூரனும் மலையனும்,
நாளைய அடிமாட்டான் - என்ற
பெயர் பெற்றொழியாமிலிருக்க
என்னினமே தமிழா..
உணவில்லாமல் இறந்தாலும் இற,
உணர்வில்லாமல் இருப்பதை மற!
பொங்கல் வைத்தது விடு,
பொங்கி எழு!
போராட்ட குணம் தவிர,
போர்க்குணமும் கொள்!
என்று..
சீறுங்கள் காளைகளே,
துடி சீவிய கொம்பன்களே!